புலம்பெயர் உறவுகள் உள்ளுராட்சி சபைகளை பொறுப்பேற்பர்?
வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றிபெறுமிடத்து அவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு ரீதியாக ஒவ்வொன்றை பொறுப்பேற்கவும் அபிவிருந்தி நடவடிக்கைகளை முனனெடுக்கவும் தயாராக இருப்பதாக சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் யாழ்.மாநகரசபைக்கான எதிகால அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் தமது கட்சியால் துறைசார் நிபுணர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது வெளிப்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
வடகிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியப் பேரவை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. ஊழல்களற்ற எமக்குள் சண்டையிடாத வினைத்திறன் மிக்க நிலைத்த அபிவிருத்தியை அடையக் கூடியவாறு சபைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு எமது கட்சி களங்காணும் என அவர் தெரிவித்தார்.அத்துடன் ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை நிராகரித்து பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்திற்கு மக்கள் ஆணை கோரியும் இத்தேர்தலை நாம் எதிர்கொள்ளவுள்ளோம். எமது உத்தியோகபூர்வ தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படுமெனவும் மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அகிம்சைக்கட்சியென சொல்லிக்கொள்ளும் தமிழரசுக்கட்சி ஏனைய கட்சி வேட்பாளர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்வைத்து அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்தார்.முன்னாள் ஆயுதக்குழுக்கள் பற்றி நான் தற்போது பேசவிரும்பவில்லை.அவை கடந்த காலங்களில் என்ன செய்ததென்பது எமது மக்களிற்கு நன்கு தெரியும்.ஆனால் ஆயுதக்குழுக்கள், வன்முறையென கதைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ஏனைய கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்துவதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே யாழ்.மாநகரசபையில் சின்னக்கடை மற்றும் நவீன சந்தை பகுதியில் போதிய வசதி வாய்ப்புக்களுடன் சந்தை தொகுதிகள் கட்டி வழங்கப்படுமெனவும் அனைத்து பகுதிகளிலும் நடைபாதை,திண்ம கழிவகற்றலில் புதிய உத்திகள் தமது முன்மொழிவுகளாக வகுக்கப்பட்டிருப்பதாகவும் மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.