யாழ்.மருதனார்மடம் பகுதியிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் பட்டப்பகலில் பக்காத் திருட்டு!

ஆசிரியர் - Admin
யாழ்.மருதனார்மடம் பகுதியிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் பட்டப்பகலில் பக்காத் திருட்டு!

யாழ்.மருதனார்மடம் பகுதியிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து ஏமாற்றித் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. ரி.வி கமரா மூலம் திருட்டில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04-02-2019) மதிய வேளை தாய், அவரது மகளான யுவதி மற்றும் மகனான சிறுவன் ஆகிய மூவரும் மருதனார்மடம் சந்தியிலுள்ள மேற்படி விற்பனை நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது குறித்த விற்பனை நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞரொருவர் மாத்திரம் நின்றுள்ளார்.

இந்நிலையில் அவர்களில் மகனான சிறுவன் விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞனிடம் பொருட்களைக் காட்டி அதனுடைய விலைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்துள்ளான். அப்போது தாயும், மகளான யுவதியும் குறித்த விற்பனை நிலையத்திலிருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுத் தமது கைப்பைகளுக்குள் வைத்துள்ளனர்.

அத்துடன் அவர்களுடன் வந்த சிறுவனும் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் தமக்கு எதுவும் வேண்டாமெனத் தெரிவித்து விட்டு குறித்த மூவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிற்பகல் வேளையில் வருகை தந்த மேற்படி விற்பனை நிலைய உரிமையாளர் விற்பனை நிலையத்தின் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகு சாதனப் பொருட்களில் சில குறைந்திருப்பது தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார். இதுதொடர்பில் அவர் பணிக்கு அமர்த்தியிருந்த இளைஞனிடம் வினாவினார். ஆனால், குறித்த இளைஞன் தனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது எனப் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் விற்பனை நிலைய உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவை ஆராய்ந்த போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் திருட்டில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அறிந்து அவ்விடத்தில் கூடியவர்களின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் சுன்னாகம் கொத்தியாலடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

அவர்களது வீடு தேடிச் சென்ற விற்பனை நிலைய உரிமையாளரிடம் தாம் திருட்டில் ஈடுபட்டமை தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளனர். இதனையடுத்து யுவதி மற்றும் சிறுமியின் எதிர்காலத்தைக் காலத்தைக் கொண்டு மேற்படி விற்பனை நிலைய உரிமையாளர் மூவரும் எச்சரித்து பெருமனதுடன் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்தில் திருட்டில் ஈடுபட வந்தவர்களில் யுவதி நவநாகரீகமான முறையில் உடையணிந்து வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு