முல்லைத்தீவு நீதிமன்றில் மூக்குடைபட்ட பொலிஸாா், ஜனநாயக வழியில் போராட தடையில்லை..
முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் நில மீட்பிற்காக தொடர்ச்சியாக கேப்பாப்பிலவு மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அதேவேளை 26.01.2019 நாளய தினமும் பாரியதொரு போராட்டம் ஒன்றினை நடாத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வி.இந்திராணி,மற்றும் சந்திரலீலா ஆகிய இருவர்களுக்கு கேப்பாபுலவு பாதுகாப்பு பிரிவு படை தலைமையகத்திற்கு முன்னால் அமைதியினை சீர்குலைக்கும் நோக்குடன் போராட்ட சதி
தொடர்பானது என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டு 24.01.18 நேற்றைய தினம் மாலை வேளை இருவரின் வீடுகளுக்கும் சென்ற பொலீசார் அழைப்பாணைகளைக் கொடுத்து, இன்று 25.01.18 காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்திருந்தனர்.
இந் நிலையில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி லெனின் குமார் அவர்களின் முன்னிலையில் முன்னிலையாகியிருந்தனர். அந்த வகையில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில், ஜனநாயக முறையில் தொடர்ந்தும்
போராட்டத்தினை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் தெரிவித்ததாக, நேற்றைய தினம் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலையானவர்களில் ஒருவரான சி.சந்திரலீலா தெரிவித்தார். மேலும் இது இராணுவத்திற்கு ஆதரவாக போலீஸார் செய்த திட்டமிட்ட செயற்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.எமது போராட்டமானது 700 நாட்களை அண்டிய நிலையில் நான் இரண்டுமாத காலமாக, என்னுடைய வீட்டுச் சூழ்நிலை காரணமாக நான் குறித்த போராட்டத்தில் பங்குபற்றவில்லை.
அதேவேளை நேற்று இரவு 8.20 மணியளவில் முள்ளியவளைப் பொலீஸார் வீட்டிற்கு வந்து நீதிமன்ற அழைப்பாணைக் கடிதம் ஒன்றை என்னிடம் தந்திருந்தனர்.கேப்பாப்புலவு படை முகாமிற்கு முன்பதான போராட்டத்தில், இராணுவ முகாமிற்கு பங்கம் வளைவித்ததாக குறித்த அழைப்பாணையில்
எழுதப்பட்டிருந்தது.அதே வேளை 17ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்திற்கு நான் செல்லவில்லை. ஏனெனில் அப்போது எனது காணவர் இறந்து பன்னிரண்டு நாட்களாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினத்தோடு கணவர் இறந்து முப்பத்தியோராவது நாள் இந்த அழைப்பாணை கொண்டுவந்து
தரப்பட்டிருந்தது. நான் அதை ஏற்று இன்றைய தினம் நீதி மன்றம் சென்றிருந்தேன். அந்தவகையில் நாளையநாள்26.01.2019 பாரிய அளவில் எமது கேப்பாப்பிலவு மக்கள் அனைவரும் இணைந்து போராட்டம் செய்யவிருந்தோம். அந்த போராட்டத்தினால் பங்கம் விளைவிக்கப்படும்
என்று எண்ணி பாதுகாப்புக்கருதி வழக்கு தொடர்ந்ததாக போலீஸாரால் கூறப்பட்டது.ஜனநாயக நாட்டில், ஜனநாயக முறையில் போராட்டம் செய்வதை தடுப்பதற்கு தங்களுக்கு அதிகாரமில்லையென்றும், ஜனநாயக முறையில் எங்களுடைய போராட்டம் தொடர்ந்தும் செய்யலாமெனவும்,
இராணுவ முகாமுக்குள் நுளைவதோ அல்லது இராணுவத்தின் தளபாடத்திற்கோ பாதிப்போ இடையூறோ இல்லாது தொடர்ச்சியாக எங்களுடைய போராட்டத்தினை முன்னெடுக்கும்படியும் நீதி மன்று தெரிவித்திருந்தது. இதேவேளை தற்போது எமது போராட்டம் இரண்டு வருடத்தினை அண்மித்த நிலையில்,
ராணுவ முகாமிற்கோ, தளபாடங்களுக்கோ இதுவரையில் நாம் பங்கம் விளைவிக்கவில்லை.நீதிமன்றத்தின் கட்டளைக்கமைவாக எங்களுடை போராட்டத்தினை முன்னெடுப்போமென நான் நீதி மன்றில் தெரிவித்தேன்.ஆனால் நான் கடந்த இரண்டு மாதகாலமாக போராட்ட இடத்திற்கே செல்லாமல்,
என்னைத் திட்டமிட்டுத்தான் நீதிமன்றில் போலீஸார் நிறுத்தியிருந்தார்கள்.இந்த போராட்டத்தில் நான் மாத்திரம் தலைமை வகிக்கவில்லை. கேப்பாப்புலவு மக்கள் அத்தனைபேரும் இதற்குத் தலைமை என்றுதான் சொல்லவேண்டும். அத்தனைபேரும் ஒத்துப்போய்த்தான்
இந்தப் போராட்டத்தினைச் செய்கின்றோம்.அத்துடன் இத்தோடு முள்ளியவளைப் போலீஸார் மூன்றாவது தடவையாக எனக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து நான் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளேன். மேலும் இன்றைய வழக்கு விசாரணைகளின்போது எனது தரப்பில்
வாதாடிய சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக ஒரு நபரை நீதிமன்றிற்கு கொண்டுவருவதற்கான காரணத்தினைக் கேட்டிருந்தார்கள்.போராட்டத்திற்கு தலைமை வகிப்பதால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாக போலீஸாராலும் தெரிவிக்கப்பட்டது.இது முள்ளியவளைப் போலீஸார்,
இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பாகவும், ஆதரவாகவும் செய்யப்படும் ஒரு செயலாகம் கருதுகிறேன். குற்றம் ஏதும் செய்யாது ஒரு குற்றவாளியாக நீதிமன்றில் நிறுத்தியதை நான் ஒரு திட்டமிட்ட செயலாகவே பார்க்கின்றேன். என்றார்.