பொது இடத்தில் கழிவுகளை வீசுவோா் மீது நடவடிக்கை தீவிரம், குடாநாடு இனிமேலாவது சுத்தமாகுமா?

ஆசிரியர் - Editor I
பொது இடத்தில் கழிவுகளை வீசுவோா் மீது நடவடிக்கை தீவிரம், குடாநாடு இனிமேலாவது சுத்தமாகுமா?

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் தா. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 

பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில், வீடுகள் மற்றும் கடைகளில் தேங்கும் கழிவுகளை சிலர் வீசுவதனால் வீதியால் செல்வோர் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அது தொடர்பில் பலர் சபைக்கு முறைப்பாடும் வழங்கியுள்ளனர். 

கழிவுகளை சேகரிப்பதற்கு என நல்லூர் பிரதேச சபையினால் கழிவுகளை கொட்டும் இடம் என அடையாளப்படுத்தப்பட்டு அங்கு தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றினுள் கழிவுகளை தரம் பிரித்து கொட்டுவதன் மூலம் கழிவகற்றல் நடைமுறையை சபையினால் உரிய முறையில் மேற்கொள்ள இலகுவாக இருக்கும். 

அதனை விடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். 

பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை மடக்கி பிடிக்க சபை ஊழியர்களை உள்ளடக்கிய விசேட அணி உருவாக்கபப்ட்டு உள்ளன. அவர்கள் கழிவுகளை வீசுபவர்களை இனம் காணுதல் , அவர்களை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். 

அதேவேளை யாழ்.மாநகர சபையினால் பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை இனம் காண்பதற்கு , அவர்களை பிடித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு என விசேட அணியினர் உருவாக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கடந்த வாரங்களில் கழிவுகளை வீசியவர்கள் எனும் குற்றசாட்டில் 25 க்கும் மேற்பட்டோரை பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு