கட்டாக்காலி நாய்கள் குறித்து அறிக்கை சமா்ப்பியுங்கள் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு, காரணம் என்ன..?

ஆசிரியர் - Editor I
கட்டாக்காலி நாய்கள் குறித்து அறிக்கை சமா்ப்பியுங்கள் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு, காரணம் என்ன..?

யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி நாய்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மல்லாகம் நீதிவான் பொது சுகாதார பரிசோதகருக்கு பணித்துள்ளார். 

யாழ். கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை ஆகியன தின்ம கழிவுகளை கொட்டி வருகின்றன. அதனால் அதனை சூழ உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

அது தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மூவர் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன. 

அந்நிலையில் கடந்த நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் ஆலய சூழலில் பக்தர்களுக்கு இடையூறாக திரிந்த கட்டாக்காலி நாய்களை யாழ்.மாநகர சபையினர் பிடித்து கல்லுண்டாய் பகுதியில் விட்டுள்ளனர். 

அவ்வாறு அப்பகுதியில் விடப்பட்ட நாய்கள் தற்போது அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதுடன் , வீதியால் செல்வோருக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றது. அத்துடன் குறித்த நாய்களால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. அது தொடர்பிலும் மல்லாகம் நீதிவானின் கவனத்திற்கு வழக்கு தொடுனர் தரப்பினால் கொண்டு செல்லப்பட்டது. 

அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிவான் கல்லுண்டாய் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளை ஆராய்ந்தார்.  அத்துடன் அப்பகுதியில் திரியும் கட்டாகாலி நாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தருமாறு வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகருக்கு பணித்தார். 

அதேவேளை நீதிவானின் வருகையை முன்னரே அறிந்து கொண்ட யாழ்.,மாநகர சபை ஊழியர்கள் வெடிகளை கொளுத்தி வீசி நாய்களை துரத்த முற்பட்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு