தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகவும், பலமாகவும் செயற்படவேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகவும், பலமாகவும் செயற்படவேண்டும் என்று மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராகப் பதவியேற்ற பேரருட் கலாநிதி லயனல் இம்மானுவேல் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகளுக்கும், மன்னாரின் புதிய ஆயருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை 5.30 மணிக்கு மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அதிலேயே மன்னார் ஆயர் இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி, இடைக்கால அறிக்கை என்பன தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆயருக்கு எடுத்துக் கூறியிருக்கின்றார்.
சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் தொடர்பில் ஊடகங்களின் ஊடாகவே இதுவரை அறிந்து வைத்துள்ளேன் என்று ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இதுவரை நான்கு கட்சிகள் செயற்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று கட்சிகள் இணைந்தே தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் ஆயருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். அதுவே பலமாக இருக்கும் என்று ஆயர் குறிப்பிட்டுள்ளார்.