யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 சிறுவர்கள் உட்பட 17 சிறுவர்களை மலேசியாவுக்கு கடத்திய ஆசாமி கைது! 13 சிறுவர்கள் தொடர்பான தகவல்களை கைப்பற்றிய பொலிஸார்...
இலங்கை சிறுவர்களை மலேசியா ஊடாக ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு கடத்தும் செய்றபாட்டில் ஈடுபட்டிருந்த நபரொருவரை நேற்று வியாழக்கிழமை (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர் கொழும்பு தெஹிவளையில் வசிக்கும் 76 வயதானவர் என்பதுடன் இலங்கையிலிருந்து 17 சிறுவர்களை அழைத்துச் சென்று மனித கடத்தலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கண்காணித்துள்ளதுடன் மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அவர் குறித்து அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும்,
அவர்களில் 13 சிறுவர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 08 சிறுவர்கள் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மீதமுள்ள 05 பேர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த சிறுவர்கள் இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு மலேசியா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலுக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.