மாற்றத்தை ஏற்படுத்த தவறினால் தமிழ் தேசியம் கனவாகப் போய்விடும் ; சட்டத்தரணி சுகாஸ்
வடக்கு மாகாண முதலவர் எங்களுடன் இணைந்து பயணிப்பதை நாம் விரும்புகின்றோம். அதற்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். எமது கட்சியில் ஒட்டுக்குழுக்கள், விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் ஆகியோரை தவிர்ந்த அனைவரும் இணைந்து கொள்ள முடியும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு வட்டுக்கோட்டையிலுள்ள பேரவையின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-
எமது கட்சியில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அனைவரும் தேசியத்தை மதிப்பவர்கள், ஊழலற்றவர்கள். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2010 ஆம் ஆண்டு பிரிந்தமைக்கு முக்கிய காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கையிலிருந்து முழுமையாக விலகிச் சென்றமையே. நாம் அப்போது பிரிந்து சென்றது சரியான முடிவுதான் எனச் சில கட்சிகள் தற்போது உணர்கின்றனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் பாதை தொடர்பில் விழிப்படையாது விட்டால் பின்னர் எந்தக் காலத்திலும் மக்களை காப்பற்ற முடியாத நிலைமை ஏற்படும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராக நாம் பயணிக்க வேண்டிய தேவை உள்ளது. நாம் சில பொது அமைப்புக்களை எம்முடன் இணைத்து தமிழ் தேசியப் பேரவை என்ற உருவாக்கத்துடன் பயணிக்கின்றோம்.
நாம் தமிழ் மக்களிடையில் இந்த உள்ளுராட்சி தேர்தலில் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம். நாம் அபிவிருத்திப் பணிகளில் பின்னிற்கமட்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களிடையில் ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி திணிக்க முனைகின்றனர்.
தமிழ் தேசியத்துக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் எந்தளவுக்கு விரோதமானவர்களோ மக்களுக்கு எத்தகைய கொடுமைகளை செய்தார்களோ அதே செயல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பும் மேற்கொண்டது.
இந்த தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தவறினால் தமிழ் தேசியம் கனவாகப் போய்விடும். நாம் வழி தவறி சென்றால் மக்களாகிய நீங்கள் எங்களை தூக்கி எறியுங்கள்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தேசியப் பாதையில் பயணிக்கின்றார். அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடம் மாறி செல்கின்றது என அண்மையிலும் கூட சுட்டிக்காட்டியிருந்தார். அவர் தமிழ் மக்கள பேரவையின் கொள்கைகளை மதிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
நாமும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையை மதிக்கின்றோம். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று மீண்டும் அழைக்கின்றோம் என அவர் அங்கு மேலும் தனது கருத்தை முன்வைத்தார்.