பொலிஸாரின் அசம்மந்தம், பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் அசம்மந்தம், பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்..

தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிசாரின் அசமந்ததால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஊடாக தப்பி சென்ற நிலையில் , அது குறித்து பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து சந்தேக நபரை பொலிசார் மீண்டும் கைது செய்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

கோப்பாய் தெற்கை சேர்ந்த குடும்பஸ்தரான இளைஞர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.  அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன் போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து ,  

பொலிஸ் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரிய போது பொலிசார் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி பொலிஸ் நிலையத்தில் இருந்து கதிரைகளை தள்ளி விழுத்தி அட்டகாசம் செய்து விட்டு பொலிஸ் நிலையத்தினுள் ஓடி,

பொலிசாரின் விடுதிகளின் ஊடாக தப்பியோடியுள்ளார்.  அது குறித்து தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் பொலிசாரிடம் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரிய போது அவர் தப்பி சென்று விட்டார் என பொலிசார் அசமந்தமாக பதிலளித்து உள்ளனர். தப்பியோடியவர் தனது வீடுக்கு தான் தப்பி சென்றுள்ளார் எனவே அங்கே சென்று கைது செய்யுமாறு கோரிய போது , 

அவரது வீட்டில் நாய்கள் நிற்கின்றன அதனால் உடனடியாக கைது செய்ய முடியாது என பொலிசார் கூறியுள்ளானர். அதேவேளை தாக்குதாளி கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வெளியே எடுத்து சென்று ,ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

குறித்த சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , உடனடியாக சந்தேக நபரை கைது செய்யுமாறு பொறுப்பதிகாரி பொலிசாருக்கு பணித்தார். அதனை அடுத்து சந்தேக நபரின் வீட்டுக்கு சென்ற பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

தாக்குதலுக்கு பயன்படுத்திய கொட்டன் மற்றும் சந்தேக நபர் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை சான்று பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? என உறவினர்கள் பொலிசாரிடம் வினாவிய போது , கொட்டனை மாத்திரமே சான்று பொருளாக மன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் , சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிளை சான்று பொருளாக ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 

குறித்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் பொலிசாரின் பாதுகாப்பில் நிற்கின்றது.  அதேவேளை குறித்த நபரின் தாக்குதலுக்கு இலக்கானவர் கோப்பாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார். 

குறித்த தாக்குதலாளியான சந்தேக நபருக்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில போலீசாருக்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. 

குறித்த சந்தேக நபர் தனது மனைவி மீது பல தடவைகள் தாக்குதலை மேற்கொண்டு உள்ளார். அந்நிலையில் கடந்த 31ஆம் திகதி மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டதில் மனைவி காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

சிகிச்சையின் பின்னர் கடந்த 4ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் போது பொலிசார் உங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என கேட்டுள்ளனர். அதன் போது அவர் தான் இவருடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே பொலிசார் அது சிவில் வழக்கு நீங்கள் அது தொடர்பில் நீதிமன்றை நாடி வழக்கு தாக்கல் செய்யுங்கள் என அந்த முறைப்பாட்டை முடிவுறுத்தி உள்ளனர்.

அதேவேளை குறித்த சந்தேக நபரால் அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் வேறு வேறு சந்தப்பர்களில் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். அவை தொடர்பிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், அவைகள் இரு தரப்பின் சம்மதத்துடன் முறைப்பாடுகள் முடிவுறுத்தப்பட்டு உள்ளன. 

 மனைவியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலான முறைப்பாட்டுக்கு குடும்ப வன்முறையின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என பொலிசாரிடம் வினாவிய போது , மனைவி தனக்கு விவாகரத்து வேண்டும் என்றே தம்மிடம் கோரியதாகவும் , தாக்குதல் மேற்கொண்டதற்கு நடவடிக்கை எடுங்கள் என முறைப்பாட்டில் கேட்காததால் , தாம் அவரை சிவில் வழக்கு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினோம் என தெரிவித்தனர். 

அயலவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேட்ட போது , தாக்குதலாளி மன நோய்க்கு உள்ளாகி உள்ளத்தால் அவ்வாறு சிறு சிறு தாக்குதலை மேற்கொள்வார் எனவும் , அதன் பின்னர் முறைப்பாட்டாளர்கள் சமரசமாக செல்ல விரும்புவதனால் தாம் நீதிமன்றில் வழக்கு தொடரவில்லை என தெரிவித்தனர். 

மனநோயாளி என பொலிசார் சந்தேகப்படும் ஒருவருக்கு எதிராக பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அவரை சமூகத்தில் நடமாட விட்டுள்ளமை , சந்தேக நபருக்கும் போலீசாருக்கும் இடையிலான நல்லுறவே காரணம் என தாக்குதலுக்கு இலக்கானவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு