இரணைமடு குளத்தின் ஆபத்தான பகுதியில் குளிக்காதீர்கள் என கூறிய காவலாளியை அடித்து, கடித்து காயப்படுத்திய காவாலிகள்..
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஆபத்தான பகுதியில் குளிக்க சென்ற இளைஞர்களை தடுத்த காவலாளி மீது குறித்த இளைஞர்கள் மூர்க்கத்தமான தாக்குதலை நடத்தியதில் படுகாயமடைந்த காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரணைமடுக் குளத்தில் தற்போது 37 அடி நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் குளப்பகுதிக்குள்ளும் அதன் முன்னால் உள்ள ஆபத்தான பகுதிக்குள்ளும் பொழுது போக்கிற்காகவோ அல்லதுநீராடச் செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தைப் பொங்கல் தினமான நேற்று சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐவர் இரணைமடுக் குளத்தின் முகப்புப் பிரதேசத்தை தவிர்த்து அருகில் உள்ள ஓர் இடைவெளியின் ஊடாக திருட்டுத் தனமாக குளத்தின் நீர் வெளியேற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.
இதனை அவதானித்த காவலாளி உடனடியாக ஓடிச் சென்று குளத்தின் ஆபத்தை கூறி அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார். குறித்த அறிவுறுத்தலை ஏற்க மறுத்தோர் காவலாளியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக காவலாளி கடும் தொணியில் வெறியேறுமாறு கூறியதனால் ஐவரும் இணைந்து காவலாளியை தாக்கியதோடு ஒருவர் காவலாளியை கடித்தும் காயப்படுத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த காவலாளி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.