சிவலிங்கப் புலவுக்குள் புகுந்த புத்தர், தமிழர் தொன்மையை அழித்து, பௌத்த மதத்தை திணிக்க தொல்லியல் திணைக்களம் முயற்சி.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு பகுதியில் தான்தோன்றீஸ்வரம் கோவில் அமைந்துள்ள சிவலிங்கப்புலவு காணியினை தொல்லியல் திணைக்களம் அபகரித்துள்ளதாக காணி உரிமையாளர் க.சிவராசா தெரிவித்துள்ளார்.
வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல் தூண்களை, தான்தோன்றீஸ்வர கோவில் வளாகத்தில் நிறுவிவிட்டு, அங்கு பலவருட பழமையான புத்தர் கோவில் இருந்ததாக பொய்யான வரலாற்றுத் தகவல்களை தொல்லியல் திணைக்களம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல தரப்பினருக்கும் பல தடவைகள் தாம் தெரியப்படுத்தியிருந்தும், இதுவரையில் எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லையென தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிவலிங்கப்புலவு காணியில் அமைந்துள்ள இந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயம் பாரம்பரியமாக எங்களுடைய பரம்பரை வழிவந்த ஆலயமாகும். குறித்த ஆலயம் அமைந்துள்ள காணியின் 1927ஆம் அண்டு, பிரித்தானியர் ஆட்சிக்கால அறுதி உறுதியும் என்னிடம் உள்ளது.
அந்தவகையில் இவ்வாலயத்தினை எமது குடும்பத்தவரே பராமரித்து வந்தனர். அத்துடன் பொங்கல், விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக இடம்பெறுவது வழமை, இங்கு இடம்பெறும் விழாக்கள் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கத்தில் பலகாலங்களுக்கு முன்பிருந்தே அச்சிடப்பட்டும் வருகின்றது.
இந் நிலையில் நாம் போர்க் காலத்தில் வவுனியாவிற்கு சென்றுவிட்டோம். பின்பு எமது பகுதி மீள்குடியமர்த ப்படும்போது நாமும் எமது பகுதிக்கு வந்தோம். அப்போது கோவில் இருந்த சிவலிங்கப்புலவுக் காணிக்குள் இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர்.
கோவிலை வழிபட அங்கு முகாமில் இருந்த இராணுவத்தினரிடம் கோரினேன். அவர்கள் அனுமதிக்கவில்லை. காணி விரைவில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இவ்வாறே இரு ஆண்டுகள் சென்றன. காணியை இராணுவம் விடுவிப்பதாக தெரியவில்லை.
இந் நிலையில் கடந்த 24.07.2012அன்று அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த காணி விடுவிப்புத் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பி வைத்தேன். இதற்கு அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.எச்.பி.சுமனசேகர அவர்கள்,
02.08.2012 திகதியிடப்பட்ட, D2/03/L/21 இலக்கக் கடித்தின் மூலம், குறித்த காணி சம்பந்தமான விடையங்களைப்பற்றி விரிவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவத் தளபதியைக் கோரியிருந்தார். அத்துடன் அந்த கடிதத்தின் பிரதியை எனக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இவற்றினால் இது விடயம் தொடர்பில் தீர்வு ஒன்று வராத நிலையில், இதன் தொடர்ச்சியாக கடந்த 05.04.2017, கோயிற் காணியில் இருக்கும் இராணுவத்தினருக்கு எதிராக, இலக்கம் 26/2, வெளிவட்ட வீதி, வவுனியாவில் அமைந்துள்ள, இலங்கை மனித உரிமை ஆணைக்குளுவில் முறைப்பாடு செய்தேன்.
அதனடிப்படையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குளுவில், HCR/V/066/2017/II என்னும் முறைப்பாட்டு இலக்கத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. முதலாங்கட்ட வழக்கு விசாரணைகளுக்காகச் சென்றிருந்தபோது,
தொல்லியல் திணைக்களத்தினரும் அங்கு வருகைதந்து, குறித்த கணி தமக்குரியதென உரிமைகோரியதுடன், வர்த்தமானியிலும் பதிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில் 16.08.2013ஆம் நாளன்று வெளியிடப்பட்ட 1823/73ஆம் இலக்க வர்த்தமானியில்,
188ஆவது அத்தியாயமான தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ், தனக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அப்போதிருந்த தேசிய மரபுரிமைகள் அமைச்சரான கலாநிதி.ஜகத்பாலசூரிய அவர்கள் குறித்த காணி தொல்லியற் திணைக்களத்திற்குரியது என வர்த்தமானியில் பதிவு செய்திருந்தார்.
அதிலும் குறிப்பாக அந்த வர்த்தமானியில் தொல்லியற் திணைக்களத்திற்கென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் 93அவது இடமாக கோவிற்காணி உள்வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில்,
கற்சிலைமடு கிராம அலுவலர் பிரிவில் அமைந்த கற்சிலைமடு(பேராறு) கட்டடச் சிதைவுகளும், கற்தூண்கள் உள்ள தொல்லியல் சிதைவுகளும் என குறித்த இடம் வர்த்தமானியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வர்த்தமானியில் பதிவுசெய்யப்பட்ட விடயம் எனக்கு அப்போதுதான் தெரியும், அது மிகவும் அதிர்சியாகஇருந்தது. இதற்கிடையில், இது தொடர்பில் பேராறு கிராம அபிவிருத்திச் சங்கத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.
அதற்கு பிரதமரின் செயலாளரால், PMO/10/04/Apr/96/2017 இலக்கமிடப்பட்ட 05.05.2017ஆம் திகதி கடிதத்தின் மூலம், நடவடிக்கை எடுக்குமாறு இந்து கலாச்சார அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரதி கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் மூன்று கட்டங்களாக இடம்பெற்றன. விசாரணைகளின்போது சகல தரப்பினரிடமும் இருந்தும் ஆதாரங்கள் கோரப்பட்டன. அந்த வகையின் எனது ஆதாரங்களை உரியவகையில் ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருந்தேன்.
அதனடிப்படையில் மூன்று கட்ட விசாரணைகளின் பின், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகம் மற்றும், நில அளவையாளர் காரியாலயம், பேராறு கிராம அலுவலகம், பண்டாரவன்னியன் சனசமூக நிலையம், பேராறு கமக்கார அமைப்பு, கற்சிலைமடு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் என்பவற்றோடு,
ஒட்டுசுட்டான் இந்து கலாச்சார உத்தியோகத்தரின் அறிக்கை போன்ற ஆணைக்குழுவினால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் ஆணைக்குழு அவதானிப்புகள் சிலவற்றினை வெளியிட்டது.
மேலும் ஆணைக்குழுவின் அந்த அவதானிப்புகளில்,
குறித்த முறைப்பாட்டாளரால் உரிமைகோரப்படும் காணியானது தனியார் காணிஎன்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் இது அரச நிலவளவை வரைபடத்தில் inset 08 இனால் காணித் துண்டு இலக்கம் 57 இனால் TP 342615 இனால் தனியார் காணியாக 1927ஆம்ஆண்டளவில் அளந்து காட்டப்பட்டுள்ளது.
மேலும் 1960ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்ட 1 inch - 1 mile வரைபடத்தில் இக்காணியில் இந்து ஆலயம் இருந்துள்ளமை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் முறைப்பாட்டாளரினால் உறுதி இலக்கம் 12766 ஆனது TP 342615 இனை காட்டாமல் 03.07.1968இல் எழுதப்பட்டுள்ளது
என்பதுடன் இக்காணியின் பரம்பரையாளர்கள் முறைப்பாட்டாளர்களின் பரம்பரையே என கள விசாரணைகளிலிருந்து அறியவருவதாக ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் அவர்களினால் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முறைப்பாட்டாளரது காணியினுள் சிவன் ஆலயமானது இருந்தது எனவும் மக்களால் வழிபடப்பட்டதென பிரதேச கிராம அலுவலரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதேச மக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களினால்
குறித்த காணி முறைப்பாட்டாளரது காணி எனவும் அதில் சிவன் ஆலயம் இருந்தது எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இக்காணி 1927களில் இருந்தே தனியார் காணியாக பாவனையிலிருந்துள்ளபோதிலும் தொல்லியல் சான்றுகள் எவையும் முன்பு கண்டறிந்து இருக்கவில்லை
என்பனவும் கவனிக்கவேண்டிய விடயமாகும். இவ்வாறான ஏழு அவதானிப்புக்களையும் 08.01.2018 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர், 64வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, படைத்தலைமையகம் ஒட்டுசுட்டான் மற்றும்,
பணிப்பாளர்/ மாவட்ட இணைப்பாளர், தொல்லியல் திணைக்களம், ஹொறவபொதான வீதி - வவுனியா ஆகியோருக்கு தெரியப்பட்டது. அத்துடன் அதன் பிரதி எனக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த கடிதத்தில் முறைப்பாட்டாளரான எனக்கு
இந்த காணியினை ஒப்படைக்கமுடியாததன் காரணத்தினை மனிதஉரிமை ஆணைக்குழு இரு தரப்பிடமிருந்தும் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து குறித்த காணியில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
இவ்வாறு இராணுவந்தினர் வெளியேறிய அன்றைய நாளே, தொல்லியல் திணைக்களத்தினர் காணியின் நான்கு மூலைகளிலும் தம்முடைய எல்லைக் கற்களை நாட்டினர். அத்துடன் குறித்த காணியில் அத்துமீறி நுழையக்கூடாதென அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனர்.
மேலும் குறித்த காணியிலிருந்த தான்தோனறீஸ்வரர் கோவில் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த சிறிய அரச மரத்தைச்சுற்றி வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்தூண்களை நிறுவிவிட்டு அப்பகுதியில் 200வருடங்களுக்கு முன்பு புத்தர் கோவிலொன்று இருந்ததாக
முற்றிலும் பொய்யான வரலாற்று தகவலை தொல்லியல் திணைக்களம் கூறிவருகின்றது. இந் நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையால் வெளியிடப்பட்ட,
கலை இலக்கிய பண்பாட்டு மலரான 'முத்தெழில்' என்னும் நூலில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முள்ளியவளை மற்றும் முத்தையன்கட்டு ஆகிய இடங்களில் உள்ள ஐயன் கோவில்களின் பூசாரியாக இருப்பவர் இது தொடர்பில் அந் நூலுக்கு வழங்கியிருக்கும் தகவல் என்வெனில்,
வாவெட்டி மலைத் தொடர் கருங்கல் உடைப்பதற்கு வழங்கப்பட்ட காரணத்தினால், அங்கிருக்கும் கோவில் சின்னங்களை அழியவிடக்கூடாது என்னும் ஆதங்கத்தின் காரணமாக சிவலிங்கங்களையும், தூண்கள் சிலவற்றினையும் உழவியந்திரத்தில் ஏற்றிவந்து தனது காணியில் வைத்திருந்ததாகவும்,
அவற்றோடு முத்தையன்கட்டு இடது கரையிலிருந்த ஐயன் சிலையையும் கொண்டு வந்து தனது காணியில் வைத்திருந்ததாகவும் இந்நிலையில் அவை அனைத்தும் பாதுகாப்புப் பிரிவினரால் பலவந்தமாக எடுத்துச்செல்லப்பட்டு கற்சிலைமடு தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் இருந்த வளவில்
வைக்கப்பட்டுள்ளதென பூசாரி தெரிவித்ததாக அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந் நூலில் வாவெட்டி மலையிலிருந்து தனியார் ஒருவரால் சேகரிக்கப்பட்ட சிவலிங்கங்களும், பீடங்களும், கருங்கல்லில் பொளியப்பட்ட கற்களும், மேலும் இந்தப் பிரதேசத்தின் பல இடங்களிலுமிருந்து
சேகரிக்கப்பட்ட கருங்கல் தூண்களும், ஒன்று சேர்க்கப்பட்டு புராதன முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு வழிபாட்டுத் தலம் பாதுகாப்புப் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, எமது தமிழ் மக்களுடைய தொல்லியல் சான்றுகளை அழித்தே
இவ்வாறு பொய்யான பௌத்த மதத்திணிப்பினை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்கின்றது என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக எமது பகுதி மக்கள் பிரதிநிதிகள் பலரிடமும் பேசியிருந்தேன். இருந்தும் இதற்கான தீர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை.
மாகாணசபைக்காலம் முடிவடைகிற காலத்திலே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை சந்தித்து இது தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தேன். ஒட்டிசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில்
இதுதொடர்பாக அவர் பேசியிருந்தார். அவரிடம் முன்னரே இவ்விடயத்தினை தெரியப்படுத்தியிருந்தால் இதற்கு ஒரு தீர்வினைப் பெற்றுத் தந்திருப்பார். தொடர்ந்தும் அவர் இதை கவனத்தில் எடுத்துச் செயற்படுவார் என நம்புகின்றேன்.
மேலும் எமது தொன்மையான வழிபாட்டுத் தலத்தினை அழித்துவிட்டு, சிறிய ஒரு அரச மரத்தின் கீழே வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல் தூண்களை, சீமெந்து சல்லிக்கல் கலவை இட்டு நிறுவிவிட்டு, 200ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் கோவில் இருந்தது என்று கூறுவது மிகவும் கேவலமான செயற்பாடாகும்.
அத்துடன் இது முற்றிலும் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட ஒரு தமிழின அழிப்புச் செயற்பாடாகும். என்றார். இது தவிர இவ்வாறு உட்பிரவேசிக்க தடை விதித்திருப்பதால் இக்காணிக்கு அப்பாலுள்ள தனக்குரித்தான 17ஏக்கர் வயல் நிலங்களிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்,
தமது அன்றாட பொருண்மியமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தாம் சிவவழிபாடு மேற்கொள்ளவும், பயிர்ச்செய்கையின் மூலம் தமது அன்றாட பொருண்மியத்தினை மேம்படுத்தவும், யாராவது இந்த காணியினை மீட்டுத்தர முன்வாருங்கள் என ஏக்கத்தோடு தெரிவித்தார்.