SuperTopAds

முல்லைத்தீவு- அளம்பில் மாவீரா் துயிலும் இல்ல காணியை சுவீகாிக்கும் முயற்சி மக்களின் எதிா்ப்பால் தோல்வி..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- அளம்பில் மாவீரா் துயிலும் இல்ல காணியை சுவீகாிக்கும் முயற்சி மக்களின் எதிா்ப்பால் தோல்வி..

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்ற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், அளம்பில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்த தனியார்காணியினை 10.01.2018 இன்றைய நாள் அளவீடு செய்து, 

24ஆம் சிங்க ரெஜிமண்ட் இராணுவத்தினருக்கு பாரப்படுத்த, நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு வந்த நிலையில், அந்த காணியில் விதைக்கப்பட்ட மாவீரரின் பெற்றோர்கள் உட்பட்ட மக்கள் அதை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் அங்கு வருகைதந்த, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், குறித்த காணியானது, காணி எடுத்தற் சட்டத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,

இத் தனியார் காணியினை அளவிடுவதில் காணி உரிமையாளர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், பிரதேசசெயலகத்தின் உத்தரவின் பேரிலேயே தாம் அளவீடு செய்வதற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அங்கு ஆர்ப்பாட்டத்திலிருந்த மக்கள் காணியை அளவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு வருகை தந்த நில அளவை உத்தியோகத்தரால் 

மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக பிரதேச செயலாளருக்குத் தொலைபேசி அழைப்பின் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் இன்னுமொரு நாளுக்கு 

நிலஅளவீட்டை செய்யுமாறு பிரதேசசெயலாளர் தெரிவித்தார். அத்துடன் நில அளவீட்டுக்கான நாள் பிற்போடப்பட்டமை தொடர்பில் மாவட்ட செயலருக்கும் அறியப்படுத்தப்பட்டது.

மேலும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் சார்பில் நில அளவை உத்தியோகத்தருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில், யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவேந்தும் இடத்தினைக் பொதுமக்களாகிய தாம் கோருவதாகவும், இக்காணி தற்போது அளவீடுசெய்யப்பட்டு இராணுவத்திற்கு 

வழங்கப்பட இருப்பதாகவும், எனவே குறித்த காணியில் தொடர்ந்தும் தாம் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்களால் கோரப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி - சிறீஸ்கந்தராசா அவர்களால் நில அளவை உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், நில அளவீட்டாளர்களும், ஆற்பாட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்தனர்.

மேலும் குறித்த தனியார் காணியானது, 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட 2092/70ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில், 

காணி எடுத்தற் சட்டம் 460இன் 5ஆம் பிரிவின் முதலாம் உட்பிரிவன் பிரகாரம் அப்போதிருந்த காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாத்திலக்கவால்,

குறித்த காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருப்பதால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமை வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மேலும் நில அளவையாளர் நாயகத்தினால் 2015.10.24ஆம் திகதி தயாரிக்கப்பட்ட mu/mll/2015/288 ஆம் இலக்க முகச்சுவட்டு வரைபடத்தின் மூலம் குறித்த காணி 2.0234ஹெக்டயர்

 விஸ்தீரணமுடையதெனவும் அவ் வர்த்தமானியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைதினம் அளம்பில் பகுதியில் அமைந்துள்ள 24ஆவது சிங்க ரெஜிமண்ட் இராணுவ முகாமிற்கு காணி அளந்து பாரப்படுத்துவதற்கான முயற்சி இடம்பெற்றது. இருப்பினும் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணி போர்க்காலப் பகுதியில், இறந்த உறவுகள் புதைக்கப்பட்ட காணியாகும். இந்த காணியில்புதைக்கப்பட்டவர்களின் உறவுகள், பல காலமாக நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

எனவே குறித்த 5ஏக்கர் காணியை பொது இடமாக அறிவித்து மக்களின் நினைவேந்தலுக்கு உரியவர்கள் ஒத்துழைப்புச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இங்கு தமது உறவுகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட இடமெனவும், தாம் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கவேண்டுமெனவும், ஒருபோதும் இக்காணியை வேறுயாருக்கும் வழங்க தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.