நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர்.. வாய் பார்த்த பொலிஸார், சிறைகாவலர்கள்.

ஆசிரியர் - Editor I
நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர்.. வாய் பார்த்த பொலிஸார், சிறைகாவலர்கள்.

பொலிசார் , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு முறையான தகவல்களை வழங்காததால் , சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில் மீண்டும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். 

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை யாழ்ப்பாண பொலிசார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றுக்கு அழைத்து வந்திருந்தனர். 

தம்மால் அழைத்து வரப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் பொலிசார் பாரப்படுத்தி விட்டு மன்றினுள் சென்று இருந்தனர். 

அந்நிலையில் குறித்த சந்தேக நபரின் பிறிதொரு வழக்கினை விசாரணைக்கு எடுக்க கோரி அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சந்தேகநபர் அவ்வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

அதனை அடுத்து குறித்த நபர் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது நீதிமன்றை விட்டு வெளியேறி தப்பி சென்றுள்ளார். 

அதன் பின்னர் ஹெரோயின் உடமையில் வைத்திருந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மன்றில் அழைத்த போது சந்தேக நபர் நீதிமன்றை விட்டு தப்பி சென்றமை தெரியவந்துள்ளது. 

அதன் பின்னர் சுதாகரித்த பொலிசார் குறித்த விடயத்தை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்று பிடியாணை உத்தரவினை பெற்று சந்தேகநபரை பொலிசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்து மீண்டும் மாலை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தினார்கள். 

அதன் போது பொலிசார் குறித்த சந்தேகபர் 21 கிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருக்கையில் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாகவும் , அவரிடம் மீட்கபட்ட போதை பொருளின் பெறுமதி சுமார் 2 இலட்ச ரூபாய் எனவும் பொலிசார் தெரிவித்தனர். 

அத்துடன் குறித்த சந்தேக நபரும் , அவருடைய மூத்த சகோதரனும் ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எனவும் , அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்த ஏதுவாக குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர். 

பொலிசாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் 7 நாட்களுக்கு சந்தேகநபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு