SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் உள்ள காணிகள் குறித்து அப்பட்டமான பொய் தகவல்களை் வெளியிடப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் உள்ள காணிகள் குறித்து அப்பட்டமான பொய் தகவல்களை் வெளியிடப்படுகிறது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசம்  மொத்தம் 9 ஆயிரத்து 148  ஏக்கர் நிலங்கள் மட்டுமே   உள்ளதாக நல்லிணக்க செயலணியினால் வெளியிடப்பட்ட தகவலே பொய்யானது என நாம் தெரிவிக்கும் நிலையில் அதன் பின்னர் 200 ஏக்கர் நிலம் மட்டுமே  முல்லைத்தீவு மாவட்டத்தில் விடப்பட்டதபோதும் 

டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபமியின் வாக்குறுதியும் வெற்றுக்கோசமாகவே முடிந்துள்ளது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற திருமதி.சாந்தி சிறீஸ்காந்தராஜா  தெரிவித்துள்ளாா். 

இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசம்  மொத்தமாக  9 ஆயிரத்து 148  ஏக்கர் நிலங்கள் உள்ளதாக நல்லிணக்க செயலணியினால் வெளியிடப்பட்ட தகவலில் இராணுவத்தினர் வசம் 540.29 ஏக்கர் தனியார் காணிகளும் 6 ஆயிரத்து 934.38 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் 

கடற்படையினர் வசம் 671 ஏக்கர் தனியார் காணியும் 44.80 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது. இதேபோன்று விமானப் படையினர் வசம் 958  ஏக்கர் அரச காணியுமாக மொத்தம்  ஆயிரத்து 211.29 ஏக்கர் தனியார் காணிகளும 7 ஆயிரத்து 937.18 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 200 ஏக்கர் நிலமே விடுவிக்கப்பட்டன.  இந்த நிலையில் வட மாகாணத்திலேயே மிகவும் அதிக நிலங்களை விழுங்கி நிற்பது  முல்லைத்தீவு மாவட்டத்தில் என்றால் அது  மிகையாகாது. அதிகநிலங்கள் படைகள்வசம் எனவும் மகாவலி எனவும் ஒருபுறமிருக்க 

சிங்களக் குடியேற்றம் என்ற பெயரிலும் மாவட்டம் பறிபோகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் மாவட்டத்தின் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் விழுங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் 60 ஆயிரம் ஏக்கரில் படையினர் வசம் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் வரையில் உள்ளது.

ஏனெனில் படை வசமுள்ளதாக நல்லிணக்க செயலணி கூறிய 9148 ஏக்கர் நிலங்களும் தனியாருக்கும் அரசிற்கும் சொந்தமான நிலங்களாகும் முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் 60 வீதமான பகுதி வனவளத் திணைக்களத்தின் ஆளுகையின் உள்ளது. 

அவ்வாறுள்ள பகுதிகளிலும் நிலைகொண்டுள்ள படையினரின் நிலப்பகுதிகள் தொடர்பில் எங்குமே காட்டப்படவேயில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில்  வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் பாரிய படை முகாம்களாக 5 நிலையங்கள் உள்ளன. 

அதாவது ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அம்பகாமம் பகுதியில் 8500 ஏக்கர் நிலத்தில் விமானப் படையினரின் பாரிய முகாமும் கரிப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் 2500 ஏக்கரில் விமான நிலையத்துடன் கூடிய முகாமும் உள்ளதோடு ஏ9 வீதியில் முருகண்டிப் பகுதியில் 2 ஆயிரம் நிலத்தில் பாரிய இராணுவமுகாமும் உண்டு . 

அதேபோன்று கேப்பாபுலவு பகுதியில் மக்களின் நிலத்திற்கும் அப்பால் 2200 ஏக்கர் வனப்பகுதியில் பாரிய விமானப்படை முகாம் உள்ளது. இவைகளின் அளவுகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு ஓரு மாவட்டத்தின் உண்மை நிலையே மூடி மறைக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும்  நில  ஆக்கிரமிப்புத் தொடர்பில்  கூட்டமைப்பினால் வெளிநாடுக ளிற்குத் தெரியப்படுத்தப்பட்ட ஆவணங்களில் இவை தொடர்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டதனை மூடி மறைக்கும் நோக்கில் வேண்டுமென்றே வெளியிடப்பட்ட அரசியல் கலப்புள்ள ஓர் புள்ளிவிபரமான 

தற்போது படையினரிடம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக் கூறும்  தனியாரின் காணி 954 ஏக்கரேனும் டிசம்பர் 31ம் திகதி கிடைக்கும் என மாவட்ட மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனாவின் வாக்குறுதியும் வெற்றுக்கோசமாகவே போய்விட்டது. என்றார்.