பெருமளவு நிவாரண பொருட்களை எதிா்பாா்த்து ஏமாற்றமடைந்த அதிகாாிகள் மற்றும் டக்ளஸ் தேவானந்தா..
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு மக்களின் மனிதநேய நிவாரண பொருட்களுடன் ரயில் ஒன்று வடக்கு நோக்கி வந்திருந்தது. இந்த ரயிலில் அதிகளவான பொருட்கள் வரும் என எதிா்பாா்த்திருந்த நிலையில் பெரும் ஏமாற்றம் மட் டுமே மிஞ்சியிருக்கின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில், தொடருந்து சேவையைப் பாதுகாப்போம் என்ற அமைப்புடன் இணைந்து தெற்கிலிருந்து உதவிப் பொருள்களைச் சேர்த்துக் கொண்டு சிறப்புத் தொடருந்து கிளிநொச்சியை நேற்று வந்தடைந்தது. முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உதவிப் பொருள்கள் மாங்குளம் தொடருந்து நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
உதவிப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரின் 4 ட்ரக் வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டன. மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவத் தளபதிகள், பிரதேச செயலர்கள் ஆகியோருடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர்களும்
மாங்குளம் தொடருந்து நிலையத்தில் காத்திருந்தனர். தொடருந்தும் வந்ததும் பொருள்கள் இறக்கப்பட்டன. ஆயிரத்து 400 கிலோ அரிசியும், 20 பொதி தண்ணீர்ப் போத்தல்களும் எடுத்து வரப்பட்டன. இதன் பெறுமதி 3 லட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவிலான உதவிப் பொருள்கள் கொண்டு வரப்படும்
என்ற எதிர்பார்ப்பில் சென்ற அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஏமாற்றமடைந்தனர். ‘5 கிலோ அரிசிப் பொதியில் 250, 10 கிலோ அரிசிப் பொதியில் 7, 25 அரிசிப் பொதியில் ஒன்று, 15 பொதி தண்ணீர்ப் போத்தல்கள் மற்றும் பாடக் கொப்பிகள் 12 டசின் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது’
என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் வைத்து கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.அருமைநாயகத்திடம் உதவிப் பொருள்களைக் கையளித்தனர். பொருள்களின் விவரங்களை மாவட்டச் செயலகம் வெளியிடவில்லை.