SuperTopAds

தமிழர் சம உரிமை இயக்கத்தின் உள்ளுராட்சி செயற்றிட்ட முன்மொழிவு காங்கேசன்துறையில் நாளை வெளியீடு

ஆசிரியர் - Admin
தமிழர் சம உரிமை இயக்கத்தின் உள்ளுராட்சி செயற்றிட்ட முன்மொழிவு காங்கேசன்துறையில் நாளை வெளியீடு

காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் சம உரிமை இயக்கம், உள்ளுராட்சி சபைகளுடாக முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளை நாளை (30) சனிக்கிழமை காங்கேசன்துறையில் வைத்து வெளியிடவுள்ளது.

மேற்படி இயக்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டமும் நாளை காங்கேசன்துறையில் ஆரம்பமாகவுள்ளது. நாளை பிற்பகல் 2.00 மணிக்கு இந்த வைபவம் நடைபெறும்.

தமிழர் சம உரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளரும் வலி.வடக்கு பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான தாயுமானவர் நிகேதன், வலி.மேற்கு பிரதேச சபை வேட்பாளரும் ஊடகவியலாளருமான ந.பொன்ராசா, காரைநகர், பூநகரி, மாந்தை மேற்கு, வவுனியா, மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வலி.வடக்கு வேட்பாளர்களுடன் இணைந்து இந்த வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.

'தன்னிறைவான தமிழ் கிராமங்கள்; சரிநிகர் சமானமான உள்ளூராட்சி' என்ற தொனிப்பொருளில் தமிழர் சம உரிமை இயகத்தின் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைமைக் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள், நம்பிகள் நல்வாழ்வு கழகம், தமிழர் வாழ்வுரிமை மையம் உள்ளிட்ட ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வர்.

தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காங்கேசன்துறை காலாச்சார முக்கோணத்தில் அமைந்துள்ள புராதன வணக்கத்தலங்களான மாவிட்டபுரம் கந்தசுவாமி, கீரிமலை நகுலேச்சரம் ஆகிய தலங்களை தரிசித்த பின்னர் இந்த முன்மொழிவுகள் வெளியிடப்பட்டு தேர்தல் பரப்புரை ஆரம்பிக்கப்படும்.

தந்தை செல்வாவின் சொந்தத் தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியில் இருந்து, தமிழர்களின் உணர்வுபூர்வ சின்னமான சைக்கிளில் தமது பயணத்தை ஆரம்பித்து மாற்றம் ஒன்றை நோக்கிப் பயணிப்பதற்கு அனைவரையும் கரம்கோர்க்குமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.