நாளுக்கு.. நாள் அதிகாிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம், கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
நாளுக்கு.. நாள் அதிகாிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம், கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அதிகாாிகள்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, முள்ளியவளை மத்தி கமக்கார அமைப்பின் பகுதிகளுக்குள் நாளுக்கு நாள் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் தமது நெற் பயிற்செய்கை மற்றும் உப உணவுப் பயிற்செயகைகள் பெரிதும் சேதத்திற்குள்ளாகியுள்ளதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முள்ளியவளை மத்தியின் கமக்கார அமைப்பின் தலைவர் கட்டையர் - மகாலிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது,

முள்ளியவளை மத்தி கமக்கார அமைப்பிற்குட்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்குரிய பகுதிகளான, 8அடி வரையில் நீர் தேக்கிவைத்திருக்கக்கூடிய சிறிய நீர்ப்பாசனக் குளமான தொத்தி மோட்டைக் குளத்தின் கீழ் 

07பங்காளிகளுக்குரிய 28ஏக்கர் வயல் நிலங்களும், 12அடி நீரினை தேக்கிவைத்திருக்கக்கூடிய ஆராத்தியா முறிப்புக் குளத்தின் கீழ் 66பங்காளிகளுக்கு 198ஏக்கர் வயல்நிலங்களும், 

துவரம் பிலவில் 9பங்காளிகளுக்குரிய 36ஏக்கர் மானாவாரி வயல் நிலங்கள், ஏனைய 28ஏக்கர் மானாவரி வயல் நிலங்களும் உள்ளன. குறித்த வயல் நிலங்களில் தற்போது காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் 

யானைகளின் அட்டகாசமானது அதிகரித்துள்ளது. தற்போதுள்ள நிலைமையில் இரவு, பகலாக வயலுக்குள்ளேயே நின்று விவசாயிகள் காவல் புரியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையினை கமநல சேவைத் திணைக்களத்தினருக்குத் தெரியப்படுத்தியதன் விளைவாக, எமது கமக்கார அமைப்பிற்கு இருபது யானை வெடிகள் வழங்கப்பட்டன.

வெடிகள் போதாமையினைக் கருத்தில் கொண்டு, நடுப்பகுதி விவசாயிகளுக்கு யானைத் தொல்லை இல்லை என்பதால், காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள வயற்காரர்களுக்கு பத்துப்பேருக்கு இரண்டு வெடிகள் வீதம் வழங்கப்பட்டது. 

அந்த வெடிகளும் ஒரே நாளிலேயே தீர்ந்து விட்டது. இதனால் தற்போது பெரும் இன்னல்களுக்கு விவசாயிகள் முகங்கொடுத்து வருகின்றனர்.

மேலும் 2016, 2017 ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையின்போதும், இப்படியான யானைத் தொல்லை இருந்தது. எனவே 2.5கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைத்துத் தருமாறு

 கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எமது கமக்கார அமைப்பால் கடிதம் வழங்கப்பட்டது. இருந்தும் இன்றுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இது தவிர முள்ளியவளை மத்திப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கிராமத்திற்குள்ளும் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்தப் பகுதியில் 36பேருக்கு புதிதாக காணிகள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டி வசிக்கின்றனர். 

இந் நிலையில் அவர்களுடைய உப உணவுப் பயிர்ச்செய்கைகளான நிலக்கடலை, தென்னை, வாழை என்பனவும் யானைகளால் அழிக்கப்படுகின்றன என அவர் கவலையோடு தெரிவித்தார்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.சுகந்தன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, கடந்த விவசாயக் குழுக்கூட்டத்தில் யானைப் பிரைச்சினைகள் தொடர்பாகப் பேசப்பட்டது.

எந்தெந்த இடங்களுக்கு யானை வேலி தேவையோ, அவ்விடங்களை அடையாளப்படுத்தி, அதற்குரிய கடிதங்களை அமைப்புகள் ஊடாகப் பெற்று, கச்சேரி ஊடாக உரிய அமைச்சுக்கு அனுப்பி வைப்பதெனவும் 

குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மதவளசிங்கன், கொக்குத்தொடுவாய் பகுதிகளில் காணப்படும் யானைப் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது.

மேலும் பல காலமாக முயற்சித்து விசுவமடு தொட்டியடி இடைக்காட்டுக் குளத்திலிருந்து, கல்மடுக் குளம் வரையில் யானைவேலி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்து முத்தையன் கட்டிற்கும் யானைவேலி அவசியம் தேவைப்படுகின்றது.

அத்துடன் எமது கமநல சேவைத் திணைக்களத்திற்கே ஐம்பது யானை வெடிகள்தான் வழங்கப்பட்டுள்ளது. வெடிகள் வேண்டுமென மீண்டும் பணிப்பாளர் அவர்கள் உரியவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு