தமிழ் இனம் சந்தித்த மோசமான பேரவலத்தின் தடங்களே.. இன்று கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள்.
ஒருநாள் கப்டன் லலித் ஹேவா என்னை அழைத்தார். மண்வெட்டியை விரைந்து எடுத்துவருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன்.
நான் அவ்விடத்தை அடைந்தபோது, அங்கு ஆடையின்றி பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் நின்றார். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார்.
பின்பு நான் எடுத்துவந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருள்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கிக் காயப்படுத்தினார்.
இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர்.அவர்கள் இருவரும் முன்பு முகாமுக்கு அழைத்துவரப்பட்டவர்கள்.”
இது சோமரத்தின ராஜபக்சவின் வாக்குமூலம். உண்மையில் யார் இந்த சோமரத்தின ராஜபக்ச? எதற்கு அவன் இப்படியொரு வாக்குமூலத்தை அளித்தான்? என்ற கேள்விகள் உங்களுக்குள் இயல்பாகவே எழுவது புரிகிறது.
1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஏழாம் திகதியை கடந்து வந்த ஒவ்வோர் தமிழ் குடிமகனது நெஞ்சக் குழியினுள்ளும் இந்தக் கேள்விகளுக்கான பதில் தீர்வின்றி அங்கலாய்த்துக்கொண்டிருக்கும்.
‘செம்மணிப் புதைகுழி’ இனவழிப்புச்
செயற்பாட்டின் ஆரம்பம்!
இது தனித்து வாக்குமூலமல்ல. இலங்கையின் அதிகார மேலாண்மை காலத்துக்குக் காலம் திட்டமிட்ட முறையில் தமிழர் பிராந்தியங்களில் நடத்தி வந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆதாரம்.
சுருங்கக் கூறின் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புச் செயற்பாட்டுக்கான ஆரம்பம் எனக் கூறிவிடலாம்.
செம்மணியில், ‘யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற வாசகம் பொலிவோடு காட்சி தருகின்ற வரவேற்பு வளைவுக்கு அருகாக இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முகாம் அமைந்திருந்தது.
அங்கு வெறிபிடித்த மிருகங்கள் குடிகொண்டி ருந்தன. தமிழ் மக்களை கொன்றொழிப்பதற்கான அரசின் செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்துகின்ற மத்திய நிலையங்களுள் ஒன்றான பரிணமிப்பாக இந்த இராணுவ முகாமும் செயலாற்றியது.
குறிப்பாக யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி கிருசாந்தியை மிகக் கொடுரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியும், கிருசாந்தியை தேடிச் சென்ற தாயார்,
சகோதரன் மற்றும் அயல்வீட்டுக்காரர் ஆகியோரை சித்திரவதை செய்து கழுத்து நெரித்துப் படுகொலை செய்தும் புதைத்த காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள்.
இலங்கையின்
அரச தலைவர்கள்
ஒவ்வொருவரும் களங்கமுடையவர்கள்!
செம்மணிப் புதைகுழி யில் இவர்கள் மட்டுமே கொன்று புதைக்கப்பட வில்லை. அங்கு சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டா ர்கள் என்ற செய்தி வெளிப்பட்டது.
செம்மணிப் புதைகுழி வழக்கு அப்போதைய அரச தலைவராக இருந்து ஆட்சி அதிகாரம் செய்த சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் நிர்வாகவி யலைக் களங்கப்படுத்தியது.
செம்மணிப் புதைகுழி வழக்கு தீராத அழுத்தங்களையும் மீள முடியாத நெருக்கடிகளையும் அரசுக்கு ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணையில் சாவுத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலம் அனைத்துலக கவனத்தையும் ஈர்த்தது.
மனித உரிமைகளின் கடைநிலையும்
பொய்த்துப்போயுள்ள நீதிபரிபாலனமும்!
“செம்மணியில் கிருசாந்தியும் அவரது உற்றார் உறவினருமே தனித்துப் புதைக்கப்படவில்லை. 400க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்டுள்ளார் கள். மேலதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படிந்து கொலை செய்யப்பட்ட சடலங்களைப் புதைப்பதுதான் எனது வேலை.
என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும். செம்மணியைவிட 16 புதைகுழிகள் உள்ளன.
அவற்றுள் பத்துப் புதை குழிகளை அடையாளம் காட்ட முடியும்” என்ற வெளிப்பாடு அனைவரையும் கதிகலங்க வைத்தது.
உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற தன்னார்வமான உணர்வை பன்னாடுகள் மத்தியில் ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புக்கள் பலவும் இதுகுறித்து குரல் கொடுத்தன.
புதைகுழியில் இருந்து வெளிப்பட்ட எலும்புக்கூடுகள் உயிர்கொண்டு தமக்கான நியாயத்தை வேண்டி நின்றன.ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. மனித உரிமைகள் செயலிழந்துபோயின.
ஆம், இதன்வழிப்பட்டே தற்போதைய அரச மேலாண்மையும் இறுதிப் போரில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான விசாரணைகளில் இருந்து தப்பிக்க மேற்கொள்கின்ற பிரயத்தனங்களும்,
பொறுப்புக்கூறலில் இருந்து அரசு பின்வாங்குகின்ற போக்கும் இலங்கையில் உள்ள மனித உரிமைச் சட்டங்கள் கொண்டுள்ள வலுவற்ற தன்மையையே எடுத்தியம்பி நிற்கின்றன.
‘மன்னார் புதைகுழி’ தமிழின
அழிப்பின் பிறிதொரு எச்சம்!
இந்தசந்தர்ப்பத்திலே அண்மையில் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த ‘லங்கா சதொச’ கட்டடம் உடைக்கப்பட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது,
அங்கு அகழப்பட்ட மண் மாதிரியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாள்கள் மன்னார் நீதவான் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளபட்ட பரிசோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு சந்தேகத்துக்கிடமான எலும்புத் துண்டுகள்
மீட்கப்பட்டுள்ளன.அதைத் தொடர்ந்து இதுவரையாக குறிப்பாக 115 நாள்கள் இடம்பெற்றுள்ள அகழ்வுப் பணிகளில் 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றுள் 269 எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தவிர சந்தேகத்துக்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
இதில் மீட்கப்பட்ட மனித எலும்பு மாதிரிகள் ‘காபன்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் அனுப்பப்படலாம் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை மீறல்கள் குறித்து
சமூக நீதியை யார் நிலைநாட்டுவது?
இந்தவிடயங்கள் அனைத்தும் அவதானத்துக்குரியன. செம்மணிப் புதைகுழியின் பின்பான, இறுதிப் போர் இடரின் பின்பான மிகப்பெரிய அவலத்தின் அடையாளமாகத் தற்போது மேலெழுந்த நிற்கின்றன.
குறிப்பாக ஜனநாயகத்தின் பாற்பட்டு ஆட்சி அதிகாரம் செலுத்தி வருவதாக மார்தட்டிக்கொள்கின்ற கடந்த கால ஆட்சியாளர்களின் ஆட்சித்திறனை மலினப்படுத்தியுள்ளது.
மிகப் பிரதானமாக இலங்கையில் குடிகொண்டுள்ள மனித உரிமைகளின் உறுதிப்பாட்டை கேள்விநிலைக்குட்படுத்தியுள்ளது.
இந்த அவலத்தின் சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து இதுவரை ஆக்கபூர்வமான விசாரணைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. மக்களாட்சித் தத்துவத்தின் உயரிய பீடமாக சொல்லப்படுகின்ற நாடாளுமன்றத்தில்
இது குறித்து ஆழமான கருத்தாடல்கள் இடம்பெற்றதை அவதானம் கொள்ள முடியவில்லை.பன்னாட்டளவிலும் இந்த விடயம் அவதானத்துக்குரியதாக மாற்றங் காணவில்லை.மனித உரிமை அமைப்புகள் குரல்கொடுப்பதாகவும் தெரியவில்லை.
உண்மையில் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டுகொள்ளப்பட்டுள்ள மேற்போந்த செயல்வினைகள், செம்மணிப் புதைகுழி விவகாரம் போன்று
மன்னார் புதைகுழி விவ காரத்தையும் மூடி மறைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகத்தை பலமாகவே ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும்.இல்லாது போனால் கடந்த காலங்களைப் போலவே பொறுப்புக்கூறலில் இருந்து
பின்வாங்க வும், ஆதரங்களைச் சுவடு தெரியாமல் அழித்து விடுவதற்கும் திரைமறைவில் காய்நகர்த்தல்களை அரசு மேற்கொள்வ தற்கு ஏதுவான சூழல் உருவாகிவிடும் என்பதை உணர்ந்துகொள்ளத் தலைப்பட வேண்டும்.
அத்துடன் சோம ரத்தின ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் குறிப்பட்டது போன்று, ‘செம்மணியை விட 16 புதைகுழிகள் உள்ளன. அதில் பத்துப் புதைகுழிகளை அடையாளம் காட்ட முடியும்!
என்ற விடயம் நீண்ட காலத்தின் பின்பு நீதித்துறை கண்டு கொள்ள வேண்டிய தேடலையும், அது மக்களுக்கு வழங்கவேண்டிய சமூக நீதியையும் வலியுறுத்தி நிற்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.