முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உட்புகுந்த கடல் நீா் அச்சத்தால் மக்கள் இடப்பெயா்வு..
முல்லைத்தீவில் ஊருக்குள் புகுந்தது கடல் நீர், அச்சத்தில் மக்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரப்பிரதேசங்கள் சிலவற்றுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.
இதனால் கரையோரப் பகுதி மக்கள் பலரும் மிகுந்த அச்சத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகின்றனர்.
மேலும் முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளான மாத்தளன், சாலை, சிலாவத்தை, முல்லைத்தீவு, உடுப்புக்குளம், வட்டுவாகல் போன்ற பகுதிகளிலேயே இவ்வாறு கடல் நீர்
ஊருக்குள் உட்புகுந்துள்ளது.இவ்வாறான சம்பவங்கள் மழைக்காலங்களில், பொதுவாக நடைபெறும் நிகழ்வுகள் பயப்படத் தேவையில்லை என கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல அனுபவம் வாய்ந்த
பெரியவர்கள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் 2004ஆம் ஆண்டு இடம் பெற்ற சுனாமியால் மிகப் பெரிய அழிவுகளைச் சந்தித்து, அந்த வடுக்களோடு இங்கு வாழ்கின்ற மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
இதுகுறித்து முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது.
முல்லைத்தீவு மாவட்டமானது சுமார் 71கிலோ மீற்றர் தூரம் கடற்கரையோரத்தையுடையது.தற்போது நிலவுகின்ற காலநிலைக்கமைய,
கடல் அலையின் மட்டம் உயர்வாக இருப்பதால், பதிவாக இருக்கின்ற நிலப்பகுதிகளான கள்ளப்பாடு, புதுமாத்தளன், உடுப்புக்குளம், வட்டுவாகல் போன்ற பகுதிகளுக்குள் நீர் உட்புகுந்திருக்கின்றது.
இது மழைக் காலநிலை நிலவுகின்ற காலங்களில் பொதுவாக இடம்பெறுகின்ற ஒருசெயற்பாடாகும். இதனால் யாரும் பயம்கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு கடல் அலையினுடைய மட்டம் உயர்வடைந்து கரையோரப்பகுதிக்குள் உட்புகலாம் என்பதை முன்பே அறிந்து, மீனவர்களுடை படகுகளை வெளியேற்றுமாறும்,
பொருட்களைஅப்புறப்படுத்துமாறும் இரண்டு நாட்களுக்கு முன்பதா அறிவித்தல் வழங்கியிருந்தோம்.அவ்வாறு எடுக்காதவர்களுடைய படகுகள் சில சேதமடைந்துள்ளன,
அத்துடன் ஓரிரு வாடிகளும் நீரினால்அடித்துச் செல்லப்பட்டுள்ளன.மேலும்இவ்வாறு நீர் உட்புகுந்த பகுதிகளுக்கு
அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் பிரதேசசெயலர் உள்ளிட்டவர்கள் சென்று தமது கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.