SuperTopAds

முல்லைத்தீவில் இயங்கவுள்ள 20 இளநீர்க்கடைகள்!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவில் இயங்கவுள்ள 20 இளநீர்க்கடைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சமூகசேவைத்திணைக்களத்தின் கண்காணிப்போடு ஐந்து பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இருபது இளநீர்க்கடைகள் இவ்வாண்டில் இருந்து இயக்கப்படவுள்ளன. குறித்த இளநீர்க்கடைகளானவை அப்பிரதேசங்களில் உள்ள இருபத்தொரு மாற்றுவலுவுள்ளோரால் நடாத்தப்பட இருக்கின்றன.

குறித்த செயற்றிட்டத்திற்கான பணப்பங்களிப்பாக ரூபாய் ஐந்து இலட்சத்தினை வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் இவ்வாண்டுக்கான தனது பிரமாண அடிப்படையிலான நன்கொடையின் ஊடாக வழங்கியுள்ளார்.

குறித்த நிதியுதவியை வழங்கும் நிகழ்வானது 21 ஆம் திகதி காலை பதினொருமணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சமூகசேவைத்திணைக்களத்தில் நடைபெற்றது.

மாவட்டசமூகசேவைப்பணியாளர் திருவாளர் ந.தசரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மாற்றுவலுவுள்ளோர் பலரும் கலந்துகொண்டனர்.