தமிழ்தேசிய கூட்டமைப்பு நடுநிலமை வகிப்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையும்..

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய கூட்டமைப்பு நடுநிலமை வகிப்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையும்..

“இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டுமெனக் கோருவது தவறு. அவ்வாறான கருத்து என்பதும் மஹிந்த சார்பான நிலைப்பாடாகவே அமையும்.”

 இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிப் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஜனாபதியின் இந்தச் செயற்பாடானது அரசமைப்பை மீறிய செயற்பாடு என்றும், தானே தற்போதும் பிரதமர் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறி வருவதால் நாட்டில் தற்போது மிகப் பெரிய அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென்றதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதால் மஹிந்த, ரணில் இருவரும் ஆதரவைக் கோரி வருகின்றனர். ஆனால், மஹிந்த நியமனம் அரசமைப்பை மீறியுள்ளதால் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையிலான தீர்மானமொன்றைக் கூட்டமைப்பு எடுத்திருக்கிறது.

இந்த நேரத்தில் ரணில், மஹிந்த போட்டியில் யாருக்கும் ஆதரவை வழங்காது கூட்டமைப்பு நடுநிலை வகித்திருக்கலாம் என்ற கருத்து வெளியிடப்படுகிறது. ஆனால், இன்றைய நெருக்கடிகளை உற்றுக் கவனித்தால் கூட்டமைப்பு நடுநிலை வகித்தால் மஹிந்த ராஐபக்‌ஷவோ மீளவும் வந்துவிடுவார். அத்தோடு அவ்வாறு நடுநிலை வகிக்கவேண்டுமெனக் கோரும் கருத்தும் மஹிந்தவுக்கு ஆதரவான கருத்தாகவே அமைகின்றது.

ஆகவே, அரசமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் செயற்பாட்டுடன் உடன்பட முடியாதென்பதால் அதனை எதிர்ப்பதென்று கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதற்காக நடுநிலை வகிக்க முடியாதென்றும் தெரிவித்துள்ளது. ஆகவே, நடுநிலை வகிக்கக் கோருவது மஹிந்த சார்பான கருத்தாகவே அமைகின்றது. அவ்வாறு நடுநிலை வகிப்பதும் தவறு” – என்றார்.

Radio
×