மன்னாரில் இளைஞனின் உடமையில் புலிக்கொடி, மாவீரர் தினப் பதாகை

மாவீரர் தினப் பதாகை மற்றும் புலிக்கொடி ஆகியவற்றைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மன்னார் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தூர் பகுதியில் மாவீரர் தினப் பதாகை ஒன்று வீதியோரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வழியாகப் பயணித்த குறித்த இளைஞர் தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இளைஞரைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், அவரது உடமைகளிலிருந்து மாவீரர் தினப் பதாகை மற்றும் புலிக்கொடி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குறித்த இளைஞர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.




