SuperTopAds

என்னால் இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை” - சாச்சனாவின் நடிப்புக்கு ஹொலிவுட்டில் பாராட்டு!

ஆசிரியர் - Editor I
என்னால் இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை” - சாச்சனாவின் நடிப்புக்கு ஹொலிவுட்டில் பாராட்டு!

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், அபிராமி மற்றும் சச்சனா நமிதாஸ் ஆகியோர் நடிப்பில் 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’.

விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நடிகர்களின் சிறப்பான நடிப்பாலும் ரசிகர்களிடையே பேசுபொருளானது.

குறிப்பாக, அப்போது புதுமுகமாக அறிமுகமான சச்சனா நமிதாஸின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டதுடன், அவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸும் ‘மகாராஜா’ திரைப்படத்தையும், அதில் சச்சனா நமிதாஸின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவின்போது, ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற LACMA விழா ஒன்றில் டாம் ஹேங்க்ஸைச் சந்தித்தபோது, இந்தியாவில் இருந்து பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்களைப் பரிந்துரைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாக கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்க்குமாறு தான் பரிந்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது LACMA கலை மற்றும் திரைப்பட விழாவில் டாம் ஹேங்க்ஸை மீண்டும் சந்தித்தபோது, அவர் முதலில் ‘மகாராஜா’ திரைப்படம் குறித்துப் பேசியதாகவும் கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

“என்னால் இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை. என்னவொரு அற்புதமான நடிகை! என்னால் அந்தக் கதாபாத்திரத்தில் அப்படி நடித்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். நான் அந்த நபரைக் கொன்றிருப்பேன்” என டாம் ஹேங்க்ஸ் கூறியதாக கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

‘மகாராஜா’ திரைப்படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுராக் காஷ்யப்பைக் குறிப்பிட்டே டாம் ஹேங்க்ஸ் இவ்வாறு கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாராட்டு, சச்சனா நமிதாஸின் நடிப்பு சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Radio