நெடுந்தீவு மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகிறது: கடல் வழியாகச் சென்ற எரிபொருள் பவுசர்கள்!

நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருட்களுடன் பவுசர்கள் கடற்படையினரின் பாரிய படகில் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கடல் கடந்த தீவான நெடுந்தீவுக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் தேவை என அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.
எரிபொருள் நிரப்பு நிலைய பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளை ஏற்றிய பவுசர்கள் கடற்படையினரின் படகில் நெடுந்தீவுக்கு எடுத்து செல்லப்பட்டது
முதல் தடவையாக நெடுந்தீவுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை பவுசர்களில் 19ஆயிரத்து 800 லீட்டர் மண்ணெண்ணெய் , 13ஆயிரத்து 200 லீட்டர் டீசல் மற்றும் 6ஆயிரத்து 600 லீட்டர் பெட்ரோல் என்பவை எடுத்து செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேர கடல் பயணத்தின் பின்னரே நெடுந்தீவினை சென்றடைய முடியும். அங்கு எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாதமையால், தமது வாகனங்களுக்கு, கடற்தொழில் உள்ளிட்டவற்றுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






