ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியது செனகல்!

2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணக் கால்பந்துத் தொடரின் சம்பியன் பட்டத்தை செனகல் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் செனகல் பெற்ற 1-0 என்ற வெற்றியை உறுதிப்படுத்தி, மொரோக்கோவுக்கு 3-0 என்ற வெற்றியை வழங்கிய ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பின் (CAF) மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானத்தை விளையாட்டுக்கான சர்வதேசத் தீர்ப்பாயம் (CAS) இரத்துச் செய்துள்ளது.
கடந்த ஜனவரி 18ஆம் திகதி மொரோக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டியின் இறுதிக் கட்டத்தில் மொரோக்கோவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி முடிவை எதிர்த்து செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் மீண்டும் மைதானத்திற்குத் திரும்பிய நிலையில் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
இதன்போது மொரோக்கோவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பும் கோலாக மாற்றப்படவில்லை.
மேலதிக நேரத்தில் செனகல் அணி கோல் அடித்து வெற்றியைப் பதிவு செய்தது.
எனினும், செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மொரோக்கோ கால்பந்துச் சம்மேளனம் CAF அமைப்பிடம் முறைப்பாடு செய்தது.
இதனை விசாரித்த CAF மேன்முறையீட்டுச் சபை, கடந்த மார்ச் 17ஆம் திகதி செனகல் அணி போட்டியில் தோல்வியடைந்ததாகத் தீர்மானித்து, மொரோக்கோவுக்கு 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வழங்கியது.
இதனை எதிர்த்து செனகல் கால்பந்துச் சம்மேளனம் CAS அமைப்பில் மேன்முறையீடு செய்தது.
இந்த மேன்முறையீட்டை விசாரித்த CAS, போட்டியைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நடுவருக்கே உரியது எனத் தெரிவித்தது.
இரு அணிகளும் மீண்டும் மைதானத்திற்குத் திரும்பி விளையாடத் தயாராக இருந்த நிலையில் நடுவர் போட்டியைத் தொடர அனுமதித்தமையையும் சுட்டிக்காட்டியது.
மேலும், போட்டி நிரந்தரமாகக் கைவிடப்படாத நிலையில், செனகல் அணி போட்டியைத் தவறவிட்டதாகக் கருதி 3-0 என்ற வெற்றியை மொரோக்கோவுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்த முடியாது என CAS தீர்மானித்தது.
இதனடிப்படையில் CAF மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டு, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட முடிவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால் இறுதிப் போட்டியில் செனகல் பெற்ற 1-0 என்ற வெற்றி மீண்டும் அங்கீகரிக்கப்பட்டு, 2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணத்தின் சம்பியனாக செனகல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், CAS தீர்ப்பை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக மொரோக்கோ கால்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது.




