வலதுசாரி கட்சியொன்றுடன் இணைவதற்கு இணக்கம் - காடி ஐசன்கோட்டின் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியாக, வலதுசாரி கட்சியொன்றுடன் இணைவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டின் கட்சி அறிவித்துள்ளது.
'இஸ்ரேல் எமது வீடு' கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேனுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அக்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இணங்கியுள்ளதாக மத்தியவாத 'யஷார்' கட்சி நேற்று தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட முதலாவது கூட்டணி இதுவாகும்.
எந்தவொரு கூட்டணியும் 61 ஆசனங்கள் கொண்ட பெரும்பான்மையைப் பெறத் தவறிய நிலையில், புதிய அரசாங்கம் இன்றி கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இஸ்ரேல் பாராளுமன்றம் பதவியேற்றது. ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் லிக்குட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும்பான்மையை இழந்த போதிலும், அவர் காபந்துப் பிரதமராகத் தொடர்கின்ற நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், ஐசன்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார்.
28 நாள் கால அவகாசத்தின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐசன்கோட்டிற்கு எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளதோடு, அவர் 14 நாட்கள் கால நீடிப்பையும் கோர முடியும். ஐசன்கோட் இதில் தோல்வியடைந்தால், அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு நெதன்யாகுவிற்கு வழங்கப்படும். எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு மற்றுமொரு தேர்தல் நடத்தப்படும்.
120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மரபுவழி கட்சிகளுடனான வலதுசாரி லிக்குட் கூட்டணி 53 ஆசனங்களைக் கொண்டுள்ளது. ஐசன்கோட்டின் மத்திய-வலதுசாரி யஷார் கட்சி மற்றும் லிபர்மேன் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் 48 ஆசனங்களைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், 19 ஆசனங்களைக் கொண்டுள்ள இஸ்ரேலின் பலஸ்தீன சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், நெதன்யாகுவிற்கு எதிரான தமது தீவிர நிலைப்பாட்டில் ஐசன்கோட்டுடன் இணைந்து செயற்படுவதால், அக்கட்சிகள் சாத்தியமான கூட்டாளிகளாகக் கருதப்படுகின்றன




