SuperTopAds

நாடாளுமன்றத்தில் விவாதத்தில் கைக் குழந்தையுடன் உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமனின்!

ஆசிரியர் - Editor IV
நாடாளுமன்றத்தில் விவாதத்தில் கைக் குழந்தையுடன் உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமனின்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமனின் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன செனட்டரான பாத்திமா பேமன், தனது பெண் குழந்தையான அலியாவுடன் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுள்ளார்.

நாட்டின் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றபோதே அவர் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்றப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இணையவழித் தீங்குகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான Online Safety Amendment (Digital Duty of Care) Bill 2026 என்ற சட்டமூலம் தொடர்பான விவாதத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் குழந்தையைப் பெற்றெடுத்த பாத்திமா பேமன், நாடாளுமன்றத்தில் பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த முதல் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அத்துடன், அரசியல் கடமைகளையும் தாய்மைப் பொறுப்புகளையும் ஒருசேர முன்னெடுத்து வரும் அவரது செயற்பாடு, பணிபுரியும் தாய்மார்களுக்கான உரிமைகள் மற்றும் ஆதரவு குறித்த விவாதத்தையும் மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

குழந்தைகளை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அழைத்துவருவதற்கும், அவர்களுக்குப் பாலூட்டுவதற்கும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Radio