பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் ஸ்திரத்தன்மையைப் பேணுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!

சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை அடுத்து, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் ஸ்திரத்தன்மையைப் பேணுமாறு அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
வர்த்தகப் போர்கள் இரு தரப்பிற்கும் நன்மை அளிக்காது எனத் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன், கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனை மூலம் தீர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரச்சினைகளை அணுக வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், சீனாவின் தொழில்துறை உற்பத்தி அதிகமாக உள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது எனவும் மறுத்துள்ளார்.
குறித்த 16 நாடுகளின் அரச மானியங்கள் தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நடத்திய பல மாத விசாரணையின் முடிவுகள் விரைவில் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.
அரச ஆதரவால் உருவாகும் அதிகப்படியான உற்பத்தித் திறன் காரணமாக, அமெரிக்க உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் குறைந்த விலையில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா என்பது குறித்து இந்த விசாரணை ஆய்வு செய்தது. எனினும், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் திகதியும் உத்தேச வரி விகிதங்களும் இன்னும் உறுதியாகவில்லை.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட விரிவான வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு முன்னர், கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பான காரணங்களுக்காக, 2026 ஆம் ஆண்டு ஜூலையில் 60 வர்த்தக பங்காளர்களுக்கு 10% முதல் 12.5% வரை வரிகளை அமெரிக்கா விதித்தது.
தற்போது ஆலோசிக்கப்படும் கூடுதல் வரிகள், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள இந்த வரிகளுக்கு மேலாகச் சேர்க்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




