டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் செல்லும் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் நாடு திரும்ப வேண்டுமானால் நாடு கடத்தல் நடைமுறையின் ஊடாகவே வர வேண்டும் என்பதே தற்போதைய பங்களாதேஷ் அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.
மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ஷேக் ஹசீனா, 2024 ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், பங்களாதேஷின் 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் நிறைவைக் குறிக்கும் டிசம்பர் 16ஆம் திகதியன்று நாடு திரும்புவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இந்தியாவின் புதுடில்லியிலிருந்து டாக்காவுக்கு தேசிய வானூர்தி சேவையை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தாரிக் ரஹ்மானிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2024 ஆகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா பங்களாதேஷ் வானூர்தி ஒன்றின் மூலம் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், அதேபோன்று மீண்டும் நாடு திரும்புவதற்கான வானூர்திப் போக்குவரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது பேச்சாளர் சையத் மொசாம்மல் அலி தெரிவித்துள்ளார்.




