SuperTopAds

இந்தியா அழைத்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் - பாகிஸ்தான்!

ஆசிரியர் - Editor IV
இந்தியா அழைத்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் - பாகிஸ்தான்!

இந்தியா அழைப்பு விடுத்தால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிகப் பேச்சுவார்த்தை மன்றத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுவரையில் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடுவதற்கு நீங்கள் அழைப்பு விடுத்தால், நிச்சயமாகப் பேசுவோம். தற்போதுவரை அவ்வாறான கலந்துரையாடலுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

1960ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கைச்சாத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியது.

இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் ஆதாரங்களின் அடிப்படையில் இருதரப்பு அல்லது பலதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தமது நாடு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Radio