தமிழ்மக்கள் பேரவையிலிருந்து புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ் வெளியேற்றப்பட வேண்டும்: கஜேந்திரகுமார்

ஆசிரியர் - Admin

தமிழ்மக்கள் பேரவையின் கொள்கைக்கு மாறாகச் செயற்பட்ட புளொட், ஈ.பி. ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் உடனடியாகத் தமிழ்மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களைக் கேட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(30) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த-2009 ஆம் ஆண்டிற்குப் பின் இலங்கைத் தீவை மையப்படுத்தியதொரு பூகோளப் போட்டி நடைபெற்று வந்த சூழலில் தமிழ்மக்களையும், நடந்து முடிந்த இனப் படுகொலையையும் தங்களுடைய நலன்களுக்காகப் பயன்படுத்தி அதில் எங்கள் தலைவர்கள், பிரதிநிதிகள் எங்களை விற்றதொரு சூழலில் எங்களால் எந்தவிதமான முன்னேற்றங்களையும் அடைய முடியவில்லை.

அந்தப் பூகோளப் போட்டியின் முழுவட்டம் போய் தற்போது மீண்டுமொரு வட்டம் ஆரம்பிக்கின்றது. இவ்வாறானதொரு காலகட்டத்தில் நேர்மையான, உறுதியான, தமிழ்மக்களின் நலன்களை மாத்திரம் மையப்படுத்திச் செயற்படக் கூடிய தரப்புக்களை மட்டும் உள்ளடக்கித் தான் ஒரு மாற்றுத் தலைமை அமைய வேண்டும்.

அந்த வகையில் இந்த விடயத்தில் தமிழ்மக்கள் பேரவையின் பங்கு காத்திரமான வகையில் அமைய வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுக்கு நேற்று (29) கடிதமொன்றை நாங்கள் எழுதியுள்ளோம்.

அந்தக் கடிதத்தில் உடனடியாகத் தமிழ்மக்கள் பேரவையைக் கூட்டி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இருதரப்புக்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்.

தமிழ்மக்கள் பேரவை எதிர்காலத்தில் தமிழர் அரசியலில் செலுத்தக் கூடிய எதிர்காலப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு நாங்கள் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும், வைத்தியகலாநிதி லக்ஸ்மனுக்கும் மேற்படி கோரிக்கையை எழுத்துமூலம் விடுத்துள்ளோம்.

கடந்த காலத்தில் தமிழ்மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்திருந்தது. அந்தத் தீர்வுத் திட்டம் தயாரித்த பின்னர் மக்களுடைய ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான முதல் சந்தர்ப்பமாக கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறித்த தீர்வுத் திட்டம் மூலம் தமிழ்மக்களிடமிருந்து ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பட்ட ஒரே தரப்புத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தான்.

தமிழ்மக்கள் பேரவைக்குள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட் ஆகிய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. புளொட் கட்சி தமிழ்மக்கள் பேரவை தீர்வுத் திட்டம் தயாரித்த போது உத்தியோகபூர்வமாக பேரவைக்குள் அங்கத்துவம் வகித்த போதும் தீர்வுத் திட்டம் தாயாரிப்பதில் எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை.

எழுச்சியுடன் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரள்கின்றார்கள் என்ற வகையில் அரசியல் இலாபம் பெறுவதற்காக மேடையேறிப் பேசினார்களே தவிர அந்தப் பேரணி ஏற்பாடுகளில் கலந்து கொள்ளவில்லை. அதுமாத்திரமன்றித் தமிழ்மக்கள் பேரவையின் எந்த வேலைத் திட்டங்களிலும் புளொட் பங்கெடுக்கவில்லை.

இலங்கை நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த ஆறு உபகுழுக்களில் ஒரு உப குழுவின் தலைவராகவும் புளொட் அமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டார்.

தமிழ்மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்திருந்த நிலையில் புளொட் அமைப்பின் தலைவர் இலங்கை நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட நிலையில் உப குழுக்கள் மூலமான செயற்பாட்டின் காரணமாக ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் யோசனைகள் தான் அந்த இடைக்கால அறிக்கையில் வெளிவந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ்மக்கள் மீது திணிக்க முற்பட்டார்கள். இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தமிழ்மக்கள் பேரவையிலுள்ளவர்கள், பல சட்டத்தரணிகள் ஆகியோர் கூறியிருக்கின்றார்கள்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தார்கள்.

இந்த மூன்று கட்சிகளும் மிகத் தெளிவாக ஒற்றையாட்சிக்கு ஆணை கேட்டுத் தான் போட்டியிட்டார்கள். ஆகவே,புளொட் அமைப்பு தமிழ்மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பும் வெளியேற்றப்பட வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது எங்களுடன் கூட்டுச் சேர்வது தொடர்பாக ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தையே நாங்கள் முன்வைக்க வேண்டுமெனக் கூறினோம்.

அந்தத் தீர்வுத் திட்டத்தை முன்னிலைப்படுத்தும் அதேவேளை எடுக்கின்ற முடிவுகள் ஒரு கூட்டு முடிவாகவும் அமைய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம். நாங்கள் தவறாக எங்கள் மக்களை வழிநடாத்த மாட்டோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையிருக்கின்றது. ஆனால்,தவறாக வழிநடத்துபவர்களைத் தடுக்கக் கூடிய வகையில் எங்களுக்கு அதிகாரங்கள் தேவைப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தல் காரணமாகத் தான் நாங்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.

உடன்படிக்கை மூலம் எங்களுக்கானதொரு பிடியை ஏற்படுத்தி ஈ.பி. ஆர்.எல்.எவ்வை அதற்குள் உள்வாங்குகின்ற போது ஈ.பி ஆர்.எல்.எவ் அமைப்பு தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முன்வைத்த பிரதானமானதொரு கட்சியான எங்களுடன் கூட்டுச் சேராமல் ஒற்றையாட்சியை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளலாமெனச் சொல்லுகின்ற உதயசூரியன் ஆனந்தசங்கரியுடன் கூட்டுச் சேர்ந்தார்கள்.

தெற்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் ஆனந்தசங்கரி மகிந்தராஜபக்சவின் கை குலுக்கி இதுவொரு மாற்றத்தினுடைய அடையாளம் எனவும் கூறியிருக்கின்றார். இதுதான் ஈ.பி. ஆர்.எல் அமைப்பு கூட்டுச் சேர்ந்த தரப்பினுடைய நிலை.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் ஆணை ஈ.பி. ஆர்.எல். எவ்விற்கு இல்லை.மாறாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான ஆனந்தசங்கரிக்குத் தான் கிடைத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டு வைத்து மிகப் பிழையானதொரு சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப் போகின்றீர்கள் என நான் காட்டமாக எடுத்துரைத்த போதும் என்னுடைய பேச்சை அவர்கள் செவிசாய்க்கவில்லை.

உதயசூரியன் சின்னம் தமிழ்மக்களுக்குத் துரோகமளிக்கும் ஒரு சின்னமென உணர்ந்த காரணத்தால் கடந்த-2004 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் அதற்கெதிராகச் செயற்பட்டார்கள். இவ்வாறான எவ்வித உண்மைகளையும் விளங்கிக் கொள்ளாத தலைமைத்துவம் தான் ஈ.பி. ஆர்.எல்.எவ்வின் தலைமைத்துவம்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் அனைத்துச் சபைகளும் தொங்கு நிலையிலேயே இருந்தன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் வவுனியா நகரசபையில் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவிசாளர் பதவியைப் பெறுவதற்காக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தி அந்தப் பதவியை ஈ.பி. ஆர்.எல்.எவ் பெற்றுக் கொண்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் செய்த அதே வேலையையே ஈ.பி. ஆர்.எல்.எவ்வும் செய்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு செய்தால் அவர்கள் துரோகிகள்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் வவுனியா நகர சபையில் செய்தது மாத்திரம் நியாயமா? அதுமாத்திரமல்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்யாத தவறொன்றையும் ஈ.பி.ஆர். எல்.எவ் செய்தது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்தது.

நெடுங்கேணியில் கூட்டமைப்புக்கும், ஈ.பி. ஆர்.எல்.எவ்விற்கும் சரிசமமாக உறுப்பினர்களுக்கான வாக்குகள் கிடைத்திருந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அந்தச் சமயத்தில் நடுநிலைமை வகித்த போது அதிர்ஷ்ட முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வென்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவின் தாமரை மொட்டு அணியுடன் ஈ.பி. ஆர்.எல்.எவ் கூட்டுச் சேர்ந்தது. இவ்வாறான நெருக்கடியான வேளைகளில் தமிழ்மக்களின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் பேரம் பேச வேண்டியது முக்கியமானது. நக்குண்டான் நாவிழந்தார் என்று சொல்வார்கள். எனவே தான் கடமைப்பட்டவர்கள் ஒருபோதும் இந்த இனத்திற்காக விட்டுக் கொடுக்காமல் பேரம் பேச முடியாது.

கட்சியென்ற வகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தேர்தல் அரசியலுக்கு அப்பால் என்ற வகையில் தமிழ்மக்கள் பேரவையும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் உள்ளார்கள்.

எங்கள் மக்களின் நலன்களுக்கப்பால் நாங்கள் எந்தவகையிலும் விலைபோகப் போவதில்லை. தமிழ்மக்களின் நலன்கள் தான் எங்களுக்கு முக்கியம் என்ற வகையிலும் இன்றுவரை செயற்பட்டு வருகின்றது.

அவ்வாறான தமிழ்மக்கள் பேரவையில் பிழையான தரப்புக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

குறித்த தரப்புக்கள் கடந்த-2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறாக நடந்திருந்தாலும் அதனை நாங்கள் மன்னிக்கத் தயார். 2015 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர் குறித்த தரப்புக்கள் தமிழ்மக்கள் பேரவைக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் அவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு