ஹோர்முஸ் ஊடாக இஸ்ரேல், அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு நிரந்தரத் தடை – ஈரானின் IRGC அறிவிப்பு!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய மோதல் முடிவடைந்த பின்னரும் இந்தத் தடை தொடரும் எனவும், குறித்த நீரிணையின் கடற்போக்குவரத்து நிர்வாகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு முக்கிய நிபந்தனைகள்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு நீரிணையில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும்.
ஈரானால் அங்கீகரிக்கப்பட்ட கடற்பாதைகளில் மட்டுமே கப்பல்கள் பயணிக்க வேண்டும்.
கப்பல் தலைவர்கள் IRGC கடற்படையிடம் அனுமதி பெறுவதுடன், கடல்சார் தொடர்பாடல் அலைவரிசை 16 ஊடாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
மேலும், AIS கண்காணிப்பு அமைப்பையும் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை மீறி அல்லது அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்லும் கப்பல்கள் இடைமறிக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம் என IRGC எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயுப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது சர்வதேச கடல்சார் சட்டம் தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட உடன்படிக்கையான UNCLOS இன் கீழ் சர்வதேச நீரிணைகளில் கப்பல்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து உரிமைகள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
ஈரான் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அங்கீகரிக்காத நாடாகும்.
ஈரானின் இந்த நிலைப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், சர்வதேச கப்பல் போக்குவரத்து, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் எண்ணெய் சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




