SuperTopAds

போருக்கு எதிராக அமெரிக்க மக்கள் வாக்களிப்பு - ஈரான் தலைவர்!

ஆசிரியர் - Editor IV
போருக்கு எதிராக அமெரிக்க மக்கள் வாக்களிப்பு - ஈரான் தலைவர்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்க மக்கள் போருக்கு எதிராகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் தரப்பை வழிநடத்தும் முகமது பாகர் காலிபாஃப், புதன்கிழமை வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதுடன், குடியரசுக் கட்சியினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரி விதிப்புகள் மற்றும் ஈரானுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் நடவடிக்கைகள் ஆகியவை அமெரிக்க மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காலிபாஃப், அமெரிக்க மக்கள் தமது மனச்சாட்சியின் அடிப்படையிலும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டும் “போருக்கு வேண்டாம்” என்ற செய்தியை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க அரசாங்கம் தனது மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்து வெளிநாட்டு நலன்களுக்காகச் செயற்பட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஆரம்பமான போர், பல மாதங்களாகத் தேக்கநிலையில் நீடித்து வருவதுடன், அவ்வப்போது இருதரப்பினருக்கும் இடையில் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Radio