SuperTopAds

யுக்ரைனுக்கு 500 பேட்ரியட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி!

ஆசிரியர் - Editor IV
யுக்ரைனுக்கு 500 பேட்ரியட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி!

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக, யுக்ரைனுக்கு 500 பேட்ரியட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க டொலர் 2.1 பில்லியன் பெறுமதியான இந்த ஏவுகணைக் கொள்வனவுக்கான நிதிப் பங்களிப்பை ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, ரஷ்யாவின் பொலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட நவீன PAC-3 ரக இடைமறிப்பு ஏவுகணைகள் 500 இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்தக் கொள்வனவுக்காக அமெரிக்க அரசாங்கம் நேரடியாக நிதி செலவிடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, ஜெர்மனி மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் நிதியுதவியுடனும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் வசதிகள் ஊடாகவும் இதற்கான நிதி வழங்கப்படவுள்ளது.

ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கான பிரதான ஒப்பந்ததாரராக அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் செயற்படவுள்ளது.

யுக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள பின்னணியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், யுக்ரைனின் பேட்ரியட் ஏவுகணைக் கையிருப்பு பெருமளவில் குறைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அத்துடன், அத்தியாவசியமான ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அமெரிக்காவின் அனுமதிக்காக ஏறத்தாழ ஒரு மாதகாலம் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், குறித்த ஏவுகணைகள் யுக்ரைனுக்கு வழங்கப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிதாக உற்பத்தி செய்யப்பட வேண்டிய ஏவுகணைகள் என்பதால், அவற்றை உடனடியாக விநியோகிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகளின்படி, ஆண்டுக்கு சுமார் 600 பேட்ரியட் ஏவுகணைகளே உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேவேளை, உலகளாவிய ரீதியில் இந்த ஏவுகணைகளுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துப் பரிமாற்றத்துக்குச் சில நாட்களுக்குப் பின்னர் இந்த ஏவுகணை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Radio