SuperTopAds

கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Binance மீது இணைய வழித் தாக்குதல் - 6 பில்லியன் டிஜிட்டல் சொத்துகள் திருட்டு!

ஆசிரியர் - Editor IV
கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Binance மீது இணைய வழித் தாக்குதல் - 6 பில்லியன் டிஜிட்டல் சொத்துகள் திருட்டு!

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Binance மீது நடத்தப்பட்ட பாரிய இணையவழித் தாக்குதலில், 6 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய டிஜிட்டல் சொத்துகள் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை பதிவான மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டுச் சம்பவமாக இது கருதப்படுவதுடன், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சொத்துகளின் மொத்தப் பெறுமதி சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என Binance நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று (29) இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிஜிட்டல் சொத்துகளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துகளை முடக்குவதற்கு பல கிரிப்டோ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

Binance நிறுவனம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அதன் பொறியியலாளர் ஒருவரின் மடிக்கணினிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய ஹேக்கர்கள், அதன் மூலம் நிறுவனத்தின் கணினி கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த இணையவழித் தாக்குதலால் பயனர்களின் பணங்களுக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என Binance நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்பட்டுள்ள அனைத்து இழப்புகளையும் நிறுவனத்தின் சொந்த நிதி மற்றும் அவசரகால பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பண வைப்புச் செய்தல் மற்றும் பணத்தை மீளப்பெறுதல் ஆகிய சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், இந்தப் பாரிய இணையவழித் தாக்குதலின் பின்னணியில் வடகொரியாவுடன் தொடர்புடைய ஹேக்கர் குழுவொன்று செயற்பட்டிருக்கலாம் எனப் பல சர்வதேச இணையப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

TRM Labs, Pangolin Intelligence மற்றும் Chainalysis ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், இந்தத் தாக்குதலை வடகொரிய ஹேக்கர் குழுவொன்று முன்னெடுத்திருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளதாக CNN செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலுடன் வடகொரியாவுக்குத் தொடர்பு இருப்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கு முன்னரும், 2025ஆம் ஆண்டு Bybit கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்திலிருந்து சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் சொத்துகள் திருடப்பட்ட சம்பவத்திலும் வடகொரிய ஹேக்கர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான இணையவழித் தாக்குதல்கள் மூலம் பெறப்படும் நிதி, வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய பாதுகாப்புத் தரப்புகள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தன.

இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி கிரிப்டோகரன்சிகளான Bitcoin மற்றும் Ethereum ஆகியவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச சட்ட அமுலாக்கல் அமைப்புகளும் இணையப் பாதுகாப்பு நிபுணர்களும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio