AI பயன்பாடு அதிகரிப்பு - பார்க்லேஸ் வங்கியில் 5,000 பணியாளரை குறைக்கத் திட்டம்!

செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தி, செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பார்க்லேஸ் வங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 5,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, வங்கியின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் இது சுமார் 5 சதவீதமாகும். ஏற்கனவே 1,000 வேலைவாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4,000 வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைக்கப்படவுள்ளன.
இந்த வேலைவாய்ப்புக் குறைப்புகளில் சுமார் 60 சதவீதம், மென்பொருள் உருவாக்குநர்கள் உள்ளிட்ட ஆதரவுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களைப் பாதிக்கும் என வங்கியின் நிதிப் பிரிவு அதிகாரி அன்னா கிராஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சில்லறை வங்கிச் சேவைப் பிரிவில் செலவுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அதேவேளை, வங்கியின் பிற பிரிவுகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப மேம்பாடு, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் நிறுவனச் செயற்பாடுகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பணித்திறனை அதிகரித்து, செலவுகளைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
பார்க்லேஸ் வங்கிக்கு மேலதிகமாக, மைக்ரோசொஃப்ட் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களும் இந்த ஆண்டு வேலைவாய்ப்புக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




