மீண்டும் ஆரம்பிப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இணக்கம் - பிரபல ஊடகங்கள் தகவல்!

அமெரிக்காவின் தலையீட்டுடன் யுக்ரைனுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சியின் மற்றொரு கட்டமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃபுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை, ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க ஆசிரியரான ஸ்டீவன் ஹப்பார்ட்டை விடுவிக்கும் நல்லெண்ண நடவடிக்கையுடனும் ஆரம்பமாகியுள்ளது.
அபுதாபியில் நடைபெறவுள்ள ரஷ்யா, யுக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மட்டப் பேச்சுவார்த்தைகள் நவம்பர் 10ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போர் முடிவடைந்த பின்னர் யுக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
எனினும், பேச்சுவார்த்தைகளின் வெற்றி தொடர்பில் ரஷ்யா அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் யுக்ரைன் முன்வைத்துள்ள சில முன்மொழிவுகள் ரஷ்யாவுக்கு முழுமையாகத் திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என கிரெம்ளின் ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு யுக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்வது மற்றும் யுக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதைத் தடுப்பது உள்ளிட்ட தனது பிரதான போர் இலக்குகள் தொடர்பில் ரஷ்யா இதுவரை நெகிழ்வுத்தன்மையைக் காட்டவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான உறவுகளில் சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுக்ரைனுக்கு வழங்கப்படும் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பாடல் வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ரஷ்யா – யுக்ரைன் போர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன




