SuperTopAds

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு - இங்கிலாந்தில் நால்வர் கைது!

ஆசிரியர் - Editor IV
காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு - இங்கிலாந்தில் நால்வர் கைது!

இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம்  நகர மத்தியில் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொட்டிங்ஹாம்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 4.50 மணியளவில் ஏஞ்சல் ரோ (Angel Row) பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரு சந்தேகநபர்களை பரிசோதிக்கச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நொட்டிங்ஹாமின் ராட்ஃபோர்ட் (Radford) பகுதியில் வாகனம் ஒன்றைச் சோதனையிட்ட காவல்துறை, 27 மற்றும் 25 வயதுடைய இரு பெண்கள் மற்றும் 24 வயதுடைய ஆண் ஒருவரைக் கைது செய்தனர்.

அத்துடன், நேற்று அதிகாலை பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) பகுதியில் 30 வயதுடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 27 வயது பெண், கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்த முயன்றமை மற்றும் உயிர் ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் குற்றவாளிக்கு உதவியளித்த சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio