SuperTopAds

விண்வெளி செல்லும் பாகிஸ்தானின் முதல் வீரர்!

ஆசிரியர் - Editor IV
விண்வெளி செல்லும் பாகிஸ்தானின் முதல் வீரர்!

பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர், சீனாவின் விண்வெளி மையம் மூலம் வரும் நவம்பர் 25 ஆம் திகதி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால்  தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விண்வெளி மற்றும் மேல் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையத்தின் கூட்டுடன் நரோவாலில் நடைபெற்ற உலக விண்வெளி வார நிறைவு விழாவில் உரையாற்றும்போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பாகிஸ்தான் 2035ஆம் ஆண்டுக்குள் நிலவில் தரையிறங்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சீனாவுடனான ஒத்துழைப்பு விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களை எட்ட உதவுமென நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் வானூர்திப்படையைச் சேர்ந்த விமானிகளான ஜீஷன் அலி (Zeeshan Ali) மற்றும் குர்ரம் தாவுத் (Khurram Daud) ஆகிய இருவர் பெய்ஜிங்கில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களில் யார் இறுதிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த அறிவிப்பு ஒக்டோபர் நடுப்பகுதி முதல் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்குச் செல்லும் விமானி 'பேலோட் ஸ்பெஷலிஸ்ட்' (Payload specialist) என்ற பெயரில் அழைக்கப்படுவதுடன், விண்கலத்தை இயக்குவதை விட பாகிஸ்தானின் அறிவியல் சோதனைகளை முன்னெடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், தகவல் தொடர்பு, பருவநிலை கண்காணிப்பு, கல்வி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்றும் குறிப்பிட்டார்.

Radio