SuperTopAds

போபோஸில் இருந்து மாதிரிப் பொருட்களை பூமிக்குக் கொண்டுவந்து ஜப்பான் வரலாற்றுச் சாதனை!

ஆசிரியர் - Editor IV
போபோஸில் இருந்து மாதிரிப் பொருட்களை பூமிக்குக் கொண்டுவந்து ஜப்பான் வரலாற்றுச் சாதனை!

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோளான 'போபோஸ்' (Phobos) பகுதிக்குச் சிறப்பு விண்கலம் ஒன்றை அனுப்பி, அங்கிருந்து மாதிரிப் பொருட்களைச் சேகரித்து மீண்டும் பூமிக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் (JAXA) ஆயத்தமாகி வருகிறது.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், செவ்வாய் கிரக மண்டலத்திலிருந்து பூமிக்கு மாதிரிப் பொருட்களைக் கொண்டுவரும் உலகின் முதல் விண்வெளித் திட்டம் இதுவேயாகும்.

செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் 'போபோஸ்' மற்றும் 'டைமோஸ்' (Deimos) ஆகிய துணைக்கோள்கள், செவ்வாயின் ஈர்ப்பு விசையில் சிக்கிய குறுங்கோள்களா அல்லது கடந்த காலத்தில் ஒரு பெரிய குறுங்கோள் செவ்வாய் மீது மோதியதால் பிரிந்து சென்ற பகுதிகளா என்பதில் விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம் கொண்டுவரப்படும் மாதிரிப் பொருட்களைப் பரிசோதிப்பதன் மூலம், இந்த நீண்டகால அறிவியல்பூர்வ புதிருக்குத் தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் நிறைவடைவதற்குச் சுமார் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுக்கும். 'போபோஸ்' துணைக்கோளிலிருந்து சேகரிக்கப்படும் மாதிரிப் பொருட்களைக் கொண்ட விண்கலப் பேழை (Capsule), எதிர்வரும் 2031 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Radio