ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கிய சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட 'GFS Pride' என்ற கப்பல், கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியுள்ளது.
இந்த கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கப்பலில் 2500க்கும் அதிகமான கொள்கலன்கள் இருந்தன.
ஈரான் போருக்கு மத்தியில்,ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணிவெடியில் (Sea Mine) சிக்கியதில் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது.
இந்தக் கப்பல் ஆபத்தான மற்றும் அனுமதியற்ற பாதையில் சென்றதாலேயே கண்ணி வெடியில் சிக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, விபத்துக்குள்ளான கப்பலில் உள்ள கொள்கலன்கள் கடலில் மிதந்து வருவதால், ஏனைய கப்பல்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும். இதனால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் உள்ளூர் கப்பல்களும் கடற்றொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.
வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




