இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-க்வீருக்கு பயணத் தடை விதித்த அவுஸ்ரேலியா!

மேற்குக்கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இடம்பெறும் குடியேற்றவாசிகளின் தீவிர வன்முறைகளில் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டி, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-க்வீருக்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் பயணத் தடை மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேற்குக்கரையில் மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்து வரும் பின்னணியில், அதற்குப் பொறுப்பான நபர்களை இலக்கு வைத்து அவுஸ்திரேலியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, அவரது சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான வீசா மறுப்பு உள்ளிட்ட இலக்கு வைக்கப்பட்ட தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இத்தடை நடவடிக்கை இஸ்ரேலிய பிரஜைகள் அனைவருக்குமானது அல்லவென்றும், தீவிரவாதப் போக்கைக் கொண்ட அமைச்சர் இத்தாமர் பென்-க்வீரை மட்டுமே குறிப்பிட்டுக் குறிவைத்து விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நடவடிக்கை என்றும் அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.




