ரஷ்யாவுக்கு பெருமளவு எரிபொருளை அனுப்பிய தென் கொரியா!

உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென் கொரிய துறைமுகங்களில் இருந்து ரஷ்யாவுக்கு 176,000 டன்களுக்கும் அதிகமான எரிபொருள், அதில் பெரும்பகுதி டீசல், அனுப்பப்பட்டதாக துறைமுகப் பதிவுகள் மற்றும் கப்பல் கண்காணிப்புத் தரவுகளின் ஆய்வு தெரிவிக்கிறது.
உல்சான்மற்றும் யோசு உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து 7 எண்ணெய் கப்பல்கள் 14 முறை ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு பயணம் செய்துள்ளன. இந்தக் கப்பல்களில் சிலவற்றுக்கு இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிற நாடுகள் விதித்துள்ள தடைகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் உள்கட்டமைப்பு சேதமடைந்ததால், அந்நாடு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை மாஸ்கோ அதிகரித்துள்ளது.
இந்த எரிபொருள் வர்த்தகம் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள அழுத்தத்தைத் தளர்த்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இருப்பினும், தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் தென் கொரிய சட்டத்தை மீறியதாகத் தெரியவில்லை. மேலும், அனுப்பப்பட்ட எரிபொருள் உண்மையில் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்டதா அல்லது வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டு கொரிய துறைமுகங்கள் வழியாக மறுஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது தெளிவாக இல்லை.
இந்தச் சம்பவங்கள் நடைபெறும் நிலையில், சியோல் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தாலும், ரஷ்யாவுடன் குறைந்த அளவிலான வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து பேணி வருகிறது.




