மதீனா சுகாதாரமிக்க நகரம் - WHO மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இஸ்லாத்தின் இரண்டாவது புனித நகரமான மதினா, உலக சுகாதார அமைப்பினால் (WHO) மீண்டும் அதிகாரப்பூர்வமாக "சுகாதாரமிக்க நகரம்" என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த அங்கீகாரத்தைப் பெற்ற மதினா நகரம், பொது மக்களின் பங்கேற்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், உணவுப் பாதுகாப்பு, அவசர காலத் தயார்நிலை, பசுமைச் சூழல் மற்றும் கல்வி உள்ளிட்ட 9 முக்கிய துறைகளின் கீழ் 80 சர்வதேசத் தரநிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இச்சான்றிதழை மீண்டும் புதுப்பித்துள்ளது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் மதினா நகரம், ஜித்தாவுக்கு அடுத்தபடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சவுதி அரேபியாவின் 'Vision 2030' தொலைநோக்கு திட்டத்திற்கு அமைய, நகர மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் சவுதி அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக மதினா பிராந்திய ஆளுநர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் தெரிவித்துள்ளார்.




