ஞானசார தேரர் தப்பிக்க உதவியவர் விளக்கமறியலில்.

நீதிமன்றால் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்தவேளை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரி, ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களனிப் பகுதியைச் சேர்ந்த குறித்த வங்கி அதிகாரியை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். பொதரகம்ம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்திருந்தும், சந்தேகநபர் தனது வாகனத்தில் அவரை ராஜகிரியவிலிருந்து எல்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஞானசார தேரர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க உதவியது மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இக்குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், சந்தேகநபரை ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.




