SuperTopAds

அரசியல் அதிகாரங்கள் தோற்கும் போது நீதித்துறையை நாடி உரிமை வென்றெடுக்கப்படும்

ஆசிரியர் - Editor III
அரசியல் அதிகாரங்கள் தோற்கும் போது நீதித்துறையை நாடி உரிமை வென்றெடுக்கப்படும்

அரசியல் அதிகாரங்கள் தோற்கும் போது நீதித்துறையை நாடி உரிமை வென்றெடுக்கப்படும் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் முஷாரப்  உரை 

 

தற்போதைய அரசாங்கத்தின் போக்கினால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் நிலையில், நீதித்துறை ஊடாக எமது உரிமைகளைப் பாதுகாத்து வென்றெடுப்பதற்காக 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் அமைப்பு' (SLMC Lawyers Forum) அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரப் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள 'சட்டத்தரணிகள் அமைப்பின்' (Lawyers Forum) அறிமுக நிகழ்வும் கலந்தரையாடலும் மருதமுனை மூன் வில்லேஜ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் உயர் பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம். ரஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான சுஹைல் முஹம்மத், ஹபீப் ரிஃபான், முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பைசர் காசிம், மன்சூர் காதர், சிரேஷ்ட சட்டத்தரணிகள், உயர் பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு விசேட உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் தற்போதைய சூழலில் அரசியல் அதிகாரங்கள் ஊடாக தீர்வுகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை வீணாகிப் போகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் எமது அரசியல் களம் உரிமைக்கான சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இதற்கமையவே, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சட்டத்தரணிகள் அமைப்பு அவசரமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

காணிச் சுவீகரிப்பு விவகாரங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்கள் ஊடாக மக்களின் பாரம்பரியக் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை அரசு கையகப்படுத்தும் சூழ்ச்சி வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், பர்தா/புர்கா அணிந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை, நிலுவையிலுள்ள காணிப் பிரச்சினைகள், மற்றும் நிர்வாக பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக இனி நீதிமன்றங்கள் ஊடாகவே சவால்தொடுத்துத் தீர்வு பெறவுள்ளோம்.

பொதுமக்கள் சமூகம் சார்ந்த சட்டச் சிக்கல்கள் மற்றும் முறைப்பாடுகளை இலகுவாகத் தெரிவிப்பதற்காகத் தனித்துவமான இணையதளம் (Website) மற்றும் WhatsApp தொலைபேசி இலக்கங்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் மாவட்ட மட்டத்தில் சட்டத்தரணிகள் குழுக்கள் இயங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசச் சட்ட உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர், தற்போதைய தலைவர், பொதுச்செயலாளர் எனப் பல வழிகாட்டிகள் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், நாட்டின் முன்னணிப் பயிற்சிப் பெற்ற சட்டத்தரணிகளைக் கொண்ட பேரியக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது. விசா மோசடி, இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) போன்றவற்றில் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, இந்த புதிய கட்டமைப்பு சமூகத்திற்கான சட்டக் கேடயமாகத் திகழும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Radio