முகப்பு பகுதியில் மர்ம அன்டெனா - உக்ரைன் மீது புதிய வகை 'Geran-5' ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா புதிய வகை தற்கொலைப்படை (Kamikaze) ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில்,
முன்னெப்போதும் இல்லாத புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் கூடிய ட்ரோன் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு எதிராகப் பயன்படுத்தும் தனது கமிகேஸ் ட்ரோன்களின் வடிவமைப்பில் ரஷ்யா தொடர்ச்சியாகப் பல்வேறு சோதனைகளையும் மாற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், இணையத்தில் வெளியாகியுள்ள புதிய காணொளி ஒன்றில், 'Geran-5' (ஜெரான்-5) ரக ட்ரோனின் முகப்பு பகுதியில் வெளிப்புறமாகத் தெரியும் வகையில் பிரத்யேக அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த அன்டெனாக்கள் எதற்காகப் பொருத்தப்பட்டுள்ளன அல்லது இவற்றின் துல்லியமான தொழில்நுட்ப நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
உக்ரைனின் வான் பாதுகாப்பு மற்றும் இலத்திரனியல் சமிக்ஞை தடுப்பு அமைப்புகளை முறியடிப்பதற்காக, வழிகாட்டல் தொழில்நுட்பம் அல்லது ட்ரோன்களை ஒருங்கிணைக்கும் தகவல் தொடர்பு வலைப்பின்னல் பயன்பாட்டிற்காக இந்த அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த அன்டெனாக்களின் சரியான கட்டமைப்பு மற்றும் செயற்பாடு குறித்து ரஷ்யத் தரப்போ அல்லது உக்ரைன் இராணுவப் புலனாய்வுத் துறையோ இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




