SuperTopAds

சர்வதேச சிறுவர் தினத்தை 'கருப்பு தினமாக' அனுஷ்டித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

ஆசிரியர் - Editor III
சர்வதேச சிறுவர் தினத்தை 'கருப்பு தினமாக' அனுஷ்டித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
சர்வதேச சிறுவர் தினத்தை 'கருப்பு தினமாக' அனுஷ்டித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் 
இறுதி யுத்தத்தின் போது ஒப்படைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடந்தது? - செல்வராசெல்வராணி கேள்வி 
செம்மணி புதைகுழி கொடூரங்களைச் சுட்டிக்காட்டி சர்வதேசத்திடம் நீதிகோரி அம்பாறையில் போராட்டம் 
  
சர்வதேச சிறுவர் தினமான இன்று(1) , இலங்கையில் சிறுவர் உரிமைகள் கொண்டாடப்படும் வேளையில், அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இத்தினம் 'கருப்பு தினமாக'  திருக்கோவில் பகுதியில்  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராசெல்வராணி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு   தெரிவித்தார்.
 அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

 "இன்று உலகமே சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது, நாங்கள் இதனை ஒரு கறுப்பு நாளாகவே எதிர்கொள்கிறோம். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, வட  பகுதியிலும் வட்டுவாகலிலும் குடும்பம் குடும்பமாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அதில் 5 மாதம், 3 மாதம், 3 வயது, 6 வயது மற்றும் 14 வயதிற்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்குவர்.இவ்வாறு இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட எமது பிஞ்சுக் குழந்தைகளுக்கு இதுவரை என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ற எந்தவொரு பதிலும் அரசாங்கத்திடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.

 "இன்று அகழ்வு செய்யப்பட்டு வரும் மனித புதைகுழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அதில் பிஞ்சுக் குழந்தைகள் பால் சூப்பும் போத்தல்களுடனும், பிஸ்கட் உறைகளுடனும், புத்தகப் பைகளுடனும், தலைகள் மற்றும் கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டும், கைகள் கயிறுகளால் பிணைக்கப்பட்டும் தோண்டி எடுக்கப்படும் காட்சிகள் எமது நெஞ்சைப் பிளக்கின்றன.சுதந்திரமான இந்த நாட்டில் சிறுவர்கள் கொடூரமாகப் புதைக்கப்பட்டிருக்கும் போது, எமக்கு என்ன சிறுவர் தினக் கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? எமது குழந்தைகளுக்கு எப்போது உண்மையான சுதந்திரமும் நீதியும் கிடைக்கிறதோ, அன்றே எமக்குச் சிறுவர் தினமாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.

"அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட வடக்குக் கிழக்கின் 8 மாவட்டங்களிலும் வீடுகளுக்குள் புகுந்து பிடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளுக்கும், குடும்பத்துடன் தூக்கிச் செல்லப்பட்ட பிஞ்சுகளுக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.உள்ளூர் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கை அற்ற நிலையில், எமது காணாமல் ஆக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளுக்கான உண்மையையும் நீதியையும் கண்டறிய எமது போராட்டத்தைச் சர்வதேசத்தை நோக்கி நகர்த்துகின்றோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Radio