SuperTopAds

நயீமாக்களின் பெருமூச்சுக்கள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்”:-சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் ஆற்றிய உரை

ஆசிரியர் - Editor III
நயீமாக்களின் பெருமூச்சுக்கள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்”:-சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் ஆற்றிய உரை
நயீமாக்களின் பெருமூச்சுக்கள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்”: தென்கிழக்குப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டில் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் ஆற்றிய உரை பெரும் வரவேற்பு!
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றப் பதிவுகளையும் தமிழ் - முஸ்லிம் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி உரை
 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையுடன், நன்னூல் மற்றும் முல்லை பதிப்பகங்கள் இணைந்து நடாத்திய “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (2000–2025)” நூல் வெளியீட்டு விழா அண்மையில் (23) தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர்கள், கலாநிதிகள், மூதவை உறுப்பினர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த நன்னூல் பதிப்பக உரிமையாளர் மணலி அப்துல் காதர், சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் பிலால், சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளைச் சர்வதேசத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் மணலி அப்துல் காதர் முன்னெடுத்து வரும் பணிகள் இதன்போது வெகுவாகப் பாராட்டப்பட்டன.

நயீமாக்களின் பெருமூச்சுக்கள் குறித்த உரை

இந்நிகழ்வில் உரையாற்றிய சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன், வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்களினால் 1993 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "நயீமாக்களின் பெருமூச்சுக்கள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுகதையை மையப்படுத்தி உரையாற்றினார்.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் காலப்பகுதியில் வடமாகாண முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாகத் வெளியேற்றப்பட்ட துயரச் சம்பவத்தையே இக்கதை கருப்பொருளாகக் கொண்டுள்ளது. வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட மாதங்களாகச் செப்டம்பர் - அக்டோபர் விளங்குவதால், அவ்வெளியேற்றத்தின் பின் முஸ்லிம்கள் எதிர்கொண்ட துயரங்களை அவர் உணர்வுபூர்வமாகச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தமிழர்களின் போராட்டத்திலுள்ள நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பிரிந்துவிடாமல் நல்லிணக்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு சமூகப் பிரதிநிதிகளுக்கும் முன்னால் அவர் மிகத் தெளிவுபட எடுத்துரைத்தார்.

சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜனின் பாராட்டு

இவ்வுரையைத் தொடர்ந்து, மேடையை விட்டு இறங்கிய சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீனைப் பாராட்டிய சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன், "நீங்கள் ஏதாவது கட்சியில் இணைந்து அரசியல் செய்கிறீர்களா?" எனக் வினவியதுடன், உரையில் காணப்பட்ட நேர்மையும் யதார்த்தமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததாக மனம் திறந்து பாராட்டினார்.

இதற்குப் பதிலளித்த சர்ஜூன் ஜமால்தீன், தான் எந்தக் கட்சியிலும் இணைந்து செயற்படவில்லை என்றும்; மக்களின் பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள் பேசுவார்கள் என்று காத்திருக்காமல், மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாமே பேச முன்வர வேண்டும் என்றும், தலைவர்கள் மக்களின் குரலாக இயங்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்

Radio