ஒலுவில் மக்களின் நீண்டநாள் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு: 5 கோடி ரூபாயில் வடிகான் சீரமைப்புப் பணிகள் ஆதம்பாவா எம்பியினால் ஆரம்பம்!

ஒலுவில் மக்களின் நீண்டநாள் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு: 5 கோடி ரூபாயில் வடிகான் சீரமைப்புப் பணிகள் ஆதம்பாவா எம்பியினால் ஆரம்பம்!








ஒலுவில் பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் எதிர்கொண்டு வந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவிலான வடிகான் சீரமைப்பு மற்றும் மீள்நிர்மாணப் பணிகள் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா இந்நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இத் திட்டத்தின் கீழ், ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலை மைதானத்தின் மேற்குப் பகுதியிலும் வெளிச்சவீட்டு வீதியிலும் காணப்படும் வடிகான்கள் அகலப்படுத்தப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. அத்துடன், தென்கிழக்கு பல்கலைக்கழக வீதி வழியாகப் பாய்ந்து களியோடை வடிச்சல் ஆற்றுடன் இணையும் வகையில் புதிய பிரதான வடிகான் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இப் புதிய வடிகான் அமைப்பின் மூலம் ஒலுவில் பகுதியில் தேங்கும் மழை வெள்ள நீர் விரைவாக ஆற்றுக்கு வடிந்தோடக்கூடிய நிரந்தர கட்டமைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சுல்தான் சத்தார், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.







